தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டேவிட் மில்லர் மற்றும் வான்டர் டுசென் அதிரடியால் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இரு அணிகளும் மோதிய இரண்டாவது டி20 போட்டி இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பவுமா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ரபாடா வீசிய முதல் ஓவரில் தொடக்க வீரர் ருதுராஜ் 1 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் களத்தில் இருந்த இஷானுடன் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்தார். ஷ்ரேயாஸ் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த இஷான் கடந்த போட்டியில் ஆடியதைபோல இந்த போட்டியிலும் அதிரடியை தொடர்ந்தார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 6 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆட முயற்சித்த இஷான் கிசன் நோர்கியா வீசிய 7 வது ஓவரில் 21 பந்துகளில் 34 ரன்கள் அடித்து வெளியேற, பின்னால் வந்த இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் 5 ரன்களில் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
கடந்த போட்டியில் அதிராக விளையாடி இந்திய அணியின் ரன் எண்ணிகையை உயர்த்திய ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் 9 ரன்களில் அவுட் ஆக, ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இந்திய அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களுடன் தடுமாற, நோர்கியா வீசிய 17 வது ஓவரில் பின்னால் வந்த அக்சார் பட்டேலும் 10 ரன்களில் க்ளீன் போல்டானார். 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக அடுத்தடுத்து 2 பௌண்டரிகளை ஓடவிட, பிரிட்டோரியஸ் கடைசி ஓவரில் ஹர்ஷல் பட்டேல் தன் பங்கிற்கு 1 பௌண்டரியை ஓடவிட்டார்.
அதே ஓவரில் கடைசி மூன்று பந்தில் தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்து 149 ரன்களை தென்னாப்பிரிக்கா அணிக்கு இலக்காக நிர்ணயம் செய்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்