அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்:


ஐஐசி உலகக் கோப்பை 2023 தொடரில் தன்னுடைய அசாத்திய திறமையால் மாற்று அணி வீரர்களை அலறவிட்டவர் முகமது ஷமி. அந்த வகையில் இந்த முறை இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 6 போட்டிகள் விளையாடிய ஷமி 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


அதோடு உலகக் கோப்பை 2023 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அதோடு சர்வதேச உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றவர் ஷமி.


இச்சூழலில், முகமது ஷமிக்கு கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனிடையே, இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அதன்படி, 3 டி 20 போட்டிகள் , 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.


இதில், 3 டி 20 போட்டி கொண்ட தொடரில் முதல் போட்டி நடைபெறவில்லை. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும், மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இதனால் 1-1 என்ற கணக்கில் டி 20 தொடர் சமன் செய்யப்பட்டது.


டெஸ்ட் போட்டி:


வரும் டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதன்படி, இந்த தொடர் ஜனவரி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி, செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பூங்காவில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது. இச்சூழலில், இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலக உள்ளதாக தகவல் வெளியானது. 


வலி இல்லை என்றால் விளையாடுவேன்:


இந்நிலையில், தனக்கு ஏற்பட்டுள்ள காயத்தால் வலி இல்லை என்றால் நிச்சயமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவேன் என்று முகமது ஷமி கூறியுள்ளார்.


இது தொடர்பாக பேசியுள்ள அவர், “நான் தென்னாப்பிரிக்கா செல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு வலி இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் நீண்ட காலமாகவே என்னுடைய முழங்காலில் ஒரு சிறிய வலி இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் நான் தற்போது மீண்டும் மருத்துவர்களிடம் சோதனை செய்ய வேண்டும். 


எனவே தற்சமயத்தில் அது என்னை தொல்லை செய்யாமல் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நான் டெஸ்ட் தொடரில் விளையாட செல்வேன். அதே போல 2024 டி20 உலகக் கோப்பைக்கும் நான் தயாராக இருக்கிறேன். வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பேன்” என்று கூறினார் முகமது ஷமி.