ஐசிசி உலகக் கோப்பை:


ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இதனால், இந்திய அணி தான் இந்த முறை கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் காத்திருக்க, இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை தங்கள் வசப்படுத்தியது. இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணி வீரர்களும் மைதானத்திலேயே கண்கலங்கினார்கள். அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி,  முகமது சிராஜ் உள்ளிட்டோர் கண்கலங்கி அழுதனர். அவர்களை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார். மேலும், உலகக் கோப்பையில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் பெருமை தெரிவித்தார். பிரதமரின் இந்த சந்திப்பு தங்களக்கு ஊக்கமளிப்பதாக இருந்ததாக வீரர்களும் தெரிவித்தனர்.


 


இதனையடுத்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 


தக்க பதிலடி கொடுப்பேன்:


இதனிடையே, உலகக் கோப்பையில் இந்திய அணியை தோற்கடித்த ஆஸ்திரேலிய அணிக்கு தக்க பதிலடி கொடுப்பேன் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அத்துடன் 2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும்  பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முயற்சிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பேசியுள்ள சுப்மன் கில், ’இந்த வருடம் எனக்கு சிறப்பாக அமைந்தாலும் உலகக் கோப்பையை தவற விட்டது மனதில் கஷ்டத்தை ஏற்படுத்தியது.


ஆனால் அதிர்ஷ்டவசமாக அடுத்த வருடம் நமக்கு மற்றுமொரு போட்டி வருகிறது.  எனவே நாங்கள் அனைவரும் அதை எதிர்நோக்குகிறோம். அடுத்த ஒரு வருடத்தில் டி20 உலகக் கோப்பை வருகிறது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் வருகிறது. அதற்கு முன்பாக தென்னாப்பிரிக்க தொடரும் நடைபெற உள்ளது. எனவே அனைத்தும் இத்தோடு முடிந்து விடவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள் எங்களுக்கு மிகவும் பெரியது.


எனவே அந்த தொடர்களுக்காக நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக கேப்டனாக செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அதில் நிறைய முன்னேற்றங்களையும் அனுபவங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். அது எனக்கு அடுத்த வருடம் உதவி செய்யும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் இந்திய அணி வீரர் சுப்மன் கில். அதனால், உலகக் கோப்பையில் இந்திய அணியை தோற்கடித்த ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணி வீரர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.