மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்வில் புதிய உச்சத்தை ஏற்படுத்தித் தந்தது டி20 உலகக்கோப்பை. கடந்த 2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கும்.


பவுல் அவுட் போட்டி:


முற்றிலும் புது வடிவிலான போட்டி, சச்சின், கங்குலி, டிராவிட் என ஜாம்பவான்கள் யாரும் இல்லாமல் களமிறங்கிய இளம் படையாக இந்தியா என புது இளம் ரத்தத்துடன் களமிறங்கியது இந்தியா. இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுக்கும். இதனால், ஆட்டம் டையில் முடிந்தது.


இருப்பினும் முக்கியமான போட்டி என்பதால் ஆட்டம் பவுல் அவுட் முறைக்குச் சென்றது. டி20 கிரிக்கெட்டின் தொடக்க காலத்தில் சூப்பர் ஓவருக்கு பதிலாக பவுல் அவுட் முறையே இருந்தது. அதன்படி, பேட்ஸ்மேன் இல்லாமல் பந்துவீச்சாளர் பந்துவீசி ஸ்டம்பை போல்டாக்கினால் ஒரு புள்ளி வழங்கப்படும்.







வெற்றி பெற்ற இந்தியா:

இதையடுத்து, இந்திய வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் பவுல் அவுட் முறைக்கு ஆயத்தமானார்கள். ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த், அகர்கர், இர்பான் பதான் என வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கையில், தோனி பவுல் அவுட் முறைக்கு அழைத்தது முதலில் சேவாக்கை. சேவாக் மெதுவாக வீசி முதல் முயற்சியிலே ஸ்டம்பை தகர்த்தார்.


அடுத்து வந்த ஹர்பஜன்சிங்கும் ஸ்டம்பை தகர்க்க, 3வது முயற்சியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ராபின் உத்தப்பாவை அழைத்தார் தோனி. தோனியின் நம்பிக்கை தகர்க்காத வகையில் உத்தப்பா ஸ்டம்பை தகர்த்தார். ஆனால், பாகிஸ்தான் அணிக்காக 3 முயற்சிகளில் பந்துவீசிய உமர்குல், அப்ரீடி உள்ளிட்ட 3 பேரும் ஒரு முறை கூட ஸ்டம்பை குறி வைத்து பந்துவீசவில்லை.


இந்த போட்டியில் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்ற அதற்கு அடுத்த சுற்றுகளில் முன்னேறி உலகக்கோப்பையையும் வென்று அசத்தியது. இந்திய அணி டி20 போட்டிகளில் பவுல் அவுட் முறையை எதிர்கொண்டதும், அதில் வெற்றி பெற்றதும் இந்த ஒரு போட்டியில் மட்டுமே ஆகும். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி 2007ம் ஆண்டு நடந்தது இதே செப்டம்பர் 14ம் தேதியில்தான் ஆகும்.


அந்த போட்டியில் இந்திய அணிக்காக ராபின் உத்தப்பா 50 ரன்களும், எம்.எஸ்.தோனி 33 ரன்களும் விளாசினர். பாகிஸ்தான் அணிக்காக மிஸ்பா உல் ஹக் மட்டும் தனி ஆளாக போராடி 53 ரன்கள் எடுத்தார்.