கிரிக்கெட்டில் எப்போதும் தான் ஒரு கிங் என்பதை விராட்கோலி மீண்டும் நிரூபித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் விராட்கோலி ஆடிய ஆட்டம் இந்திய அணிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் அளித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணிக்காக களமிறங்கிய விராட்கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 166 ரன்களை விளாசி அதகளப்படுத்தினார்.
இந்த போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது, ரசிகர்கள் கூட்டத்தின் உள்ளே இருந்த ரசிகர் ஒருவர் சட்டென்று மைதானத்தின் உள்ளே நுழைந்தார். விறுவிறுவென மைதானத்தின் உள்ளே ஓடிய அவர் விராட்கோலியின் காலில் பட்டென்று விழுந்து வணங்கினார். இதை சற்றும் எதிர்பாராத விராட்கோலி அதிர்ச்சியில் உறைந்தார்.
இதைக்கண்ட இந்திய வீரர்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விராட்கோலியின் காலில் விழுந்த ரசிகர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென இலங்கை ரசிகர் மைதானத்திற்குள் நுழைந்ததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை வெளியே அனுப்புவதற்காக மைதானத்திற்குள் நுழைந்தனர்.
பின்னர், அந்த ரசிகர் தன்னுடைய மொபைலில் விராட்கோலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். விராட்கோலியுடன் அவர் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை பிரபல கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் எடுத்துக்கொடுத்தார். மைதானத்திலே அரங்கேறிய இந்த சம்பவம் ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த விராட்கோலி, கடந்தாண்டு இறுதி முதல் மீண்டும் தனது அசுரத்தனமான பேட்டிங்கிற்கு திரும்பியுள்ளார். அவரது இந்த மிரட்டலான பேட்டிங் முன்னணி அணிகளுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட்கோலி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 46 சதங்களை விளாசியுள்ளார். சர்வதேச அளவில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். விராட்கோலி விரைவில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
விராட்கோலியின் இந்த பேட்டிங்கால் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.