ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்ற இந்திய அணி, தொடரை கைப்பற்றியதோடு பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.


தொடரை வென்ற இந்தியா:


அடுத்த மாதம் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்ற நிலையில், இந்தூரில் நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. அதில் முதலில் விளையாடிய இந்திய அணி சுப்மன் கில், ஸ்ரேயாஷ் ஐயரின் அபார சதங்கள் மற்றும் சூர்யாகுமார் யாதவ், கே.எல். ராகுலின் அபார ஆட்டத்தால்,  399 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியபோது, மழை குறுக்கிட்டதால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதில், 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியுற்றது. இதனால், 2-0 என இந்திய அணி தொடரை கைப்பற்றியதோடு பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.


சாதனைகள் பட்டியல்:



  • இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் விளையாடிய ஒருநாள் போட்டியில் தோற்றதே இல்லை என்ற வெற்றிப் பயணத்தை இந்திய அணி தொடர்கிறது. இதுவரை அங்கு விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது

  • நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் மொத்தமாக 18 சிக்சர்களை விளாசினர். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் 3000 சிக்சர்களை விளாசிய முதல் நாடு என்ற பெருமையை இந்திய அணி பெற்றது

  •  கடந்த 2013ம் ஆண்டு பெங்களூருவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், இந்தியா 383 ரன்கள் குவித்தது. அதுதான், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி குவித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது

  • வெறும் 24 பந்துகளில் அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிவேக அரைசதம் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்

  • ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர்களின் பட்டியலில், சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்தை எட்டியுள்ளார்

  • சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 35 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில், முதலிடத்தில் இருந்த ஹசிம் ஆம்லாவின் (1844) சாதனையை இந்திய வீரர் கில் (1900+) முறியடித்துள்ளார்

  • ஒரே ஆண்டில் உள்ளூரில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் 4 சதங்களை விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ் இந்த சாதனையை படைத்துள்ளனர். 

  • ஒரே ஆண்டில் உள்ளூரில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். முன்னதாக, சச்சின், கோலி மற்றும் ரோகித் ஆகியோர் தலா 3 சதங்களை விளாசியிருந்தனர்.

  • கில் ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டில் சொந்த மண்ணில் 800 அல்லது அதற்கு மேல் (802) எடுத்த நான்காவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் நியூசிலாந்து வீரர் கப்தில் (973), இந்திய வீரர் சச்சின் (957) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். 

  • சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற, கும்ப்ளேவின் சாதனைய அஸ்வின் (144) தகர்த்துள்ளார்

  • இந்த தொடரானது இந்திய அணி உள்ளூரில் வெல்லும் இரண்டு நாடுகளுக்கு இடையேயான 51 ஒருநாள் தொடராகும். மற்ற எந்த அணியும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை

  • ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6 சதங்களை விளாசிய இந்தியர் என்ற ஷிகர் தவானின் சாதனையை, சுப்மன் கில் (35 இன்னிங்ஸ்) உடைத்துள்ளார்.