ஆசியக்கோப்பை தொடரின் இறுதிபோட்டியில் இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய,  முகமது சிராஜ் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசிய வீரர்களின் எலைட் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.


முகமது சிராஜ் மிரட்டல்:


உலக்கோப்பை தொடரின் முன்னோட்டமாக கடந்த மாதம் தொடங்கிய ஆசியக்கோப்பை தொடரின், இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இலங்கை அணி வீரர்கள் திக்குமுக்காடினர். இதனால், 15.2 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 50 ரன்களை மட்டுமே எடுத்தது. முகமது சிராஜ் 7ஓவர்களை வீசி ஒரு ஓவரை மெய்டனாக்கியதோடு, 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் புதிய சாதனைப் பட்டியலிலும் சேர்ந்துள்ளார்.


ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்கள்:


இலங்கை அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசிய வீரர்களின் பட்டியலில் முகமது சிராஜ் இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக, 11 முறை ஒரே பந்துவீச்சாளர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ஸ்டூவர்ட் பின்னி, வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில், 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்த முகமது சிராஜ், ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியில், வெறும் 7 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தபோதே, சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது. 


சிராஜின் மற்ற சாதனைகள்:



  • இந்த போட்டியில் தான் வீசிய இரண்டாவது ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

  • வெறும்  16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5-விக்கெட்ஸ் வீழ்த்திய இலங்கை வீரர் ஜெமிந்தா வாஸின் சாதனையை சமன் செய்துள்ளார்.

  • தனது 29வது ஒருநாள் போட்டியிலேயே அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார். வேகமாக 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

  • ஒருநாள் போட்டிகளில் வீசிய பந்துகளின் அடிப்படையில், அதிவேகமாக 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்த நபர்களின் பட்டியலில் சிராஜ் (1002) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் வெறும் 847 பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜெமிந்தா வாஸ் முதலிடத்தில் உள்ளார்.