உலக சாலைப் பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணியும், தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணியும் கான்பூர் மைதானத்தில் நேருககு நேர் மோதின. இந்த போட்டியில் இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக பொறுப்பு வகித்தார். தென்னாப்பிரிக்க அணிக்கு ஜான்டி ரோட்ஸ் கேப்டனாக பொறுப்பு வகித்தார்.
சச்சின் தலைமையிலான இந்திய அணியில் நமன் ஓஜா, சுரேஷ் ரெய்னா, ஸ்டூவர்ட் பின்னி, யுவராஜ்சிங், யூசுப் பதான், மன்ப்ரீத் கோனி, இர்பான் பதான், முனாப்படேல், ராகுல்சர்மா, பிரக்யான் ஓஜா ஆகியோர் இடம்பிடித்திருந்னர். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு நமன் ஓஜாவும், சச்சின் டெண்டுல்கரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்.
சாதனைகளின் நாயகன் சச்சின் அற்புதமான இரண்டு பவுண்டரிகளை விளாசி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திய நிலையில், 16 ரன்களில் நிடினி பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர், சிறிது நேரத்தில் நமன் ஓஜாவும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சுரேஷ் ரெய்னாவுடன் ஸ்டூவர்ட் பின்னி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக, ஸ்டூவர்ட் பின்னி மைதானத்தில் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தார். அணியின் ஸ்கோர் 116 ரன்களை எட்டியபோது 22 பந்துகளில் 33 ரன்களை விளாசிய ரெய்னா அவுட்டானார்.
அடுத்து வந்த யுவராஜ்சிங் 6 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னியுடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார். யூசுப் பதான் களமிறங்கியது முதல் சிக்ஸர்களாக விளாசினார். அரைசதம் கடந்த பிறகும் ஸ்டூவர்ட் பின்னி அதிரடி காட்டினார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை விளாசியது.
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக் லெஜண்ட்ஸ் அணிக்கு ஆண்ட்ரூ புட்டிக்கும், மோர்னேவும் அதிரடி தொடக்கத்தை அளித்தனர். மோர்னே 26 ரன்களில் ஆட்டமிழக்க. அடுத்து வந்த பீட்டர்சன் 10 ரன்களிலும், ருடால்ப் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆண்ட்ரூ புட்டிக்கும் 23 ரன்களில் வெளியேற தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியது. இறுதியில் தென்னாப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. கேப்டன் ஜான்டி ரோட்ஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி 27 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 38 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால், இந்திய லெஜண்ட்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 42 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 82 ரன்கள் விளாசிய ஸ்டூவர்ட் பின்னி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக உலக சாலைப் பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நேற்று கான்பூரில் தொடங்கியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் விதத்தில் லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டாக நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாட்டு அணிகள் பங்கேற்கின்றன. இந்த நாடுகளின் சார்பில் அந்தந்த நாடுகளின் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கின்றனர்.