இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ராஜ்கோட்டில் இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆடியது. இந்த போட்டியில் அந்த அணியின் கேப்டன் கேபி லீவிசின் அபாரமான பேட்டிங்கால் தடுமாறிய அயர்லாந்து அணி 238 ரன்களை விளாசியது.
புதிய நட்சத்திரம் ப்ரதிகா:
இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்காக கேப்டன் ஸ்மிரிதி மந்தனா அதிரடியாக ஆடி 41 ரன்களை எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 20 ரன்களிலும், ஜெமிமா 9 ரன்னிலும் அவுட்டாக அடுத்து வந்த தேஜல் ஹசப்னிசுடன் இணைந்து தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் அபாரமாக ஆடினார்.
அவரது அபாரமான பேட்டிங்கால் 116 ரன்களுக்கு 3 விக்கெகட்டுகளை இழந்த இந்திய அணி இலக்கை நோக்கி அபாரமாக முன்னேறி வெற்றி பெற்றது. ப்ரதிகா ராவலின் 89 ரன்கள் உதவியுடன் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ப்ரதிகா ராவல் இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி 134 ரன்கள் எடுத்துள்ளார்.
ப்ரதிகா ராவல் பற்றி அறியாத தகவல்கள்:
1. ப்ரதிகா ராவல் ஒரு 2கே கிட் ஆவார். இவர் 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி பிறந்தவர்.
2. ப்ரதிகா ராவலின் தந்தை பிசிசிஐ-யால் அங்கீகரிக்கப்பட்ட லெவல் 2ம் தர நடுவருக்கான சான்றிதழ் பெற்றவர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
3. ப்ரதிகா ராவல் தனது 4ம் வகுப்பு முதலே கிரிக்கெட் ஆடி வருகிறார். ப்ரதிகா ராவல் ஜிம்கானா கிரிக்கெட் அகாடமியில் தனது 10 வயது முதலே கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார்.
4. இந்திய அணியின் புதிய தொடக்க வீராங்கனை ப்ரதிகா ராவல் கிரிக்கெட் மட்டுமின்றி கூடைப்பந்திலும் அபாரமான திறமை கொண்டவர். அவர் 2019ம் ஆண்டு டெல்லியில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். கூடைப்பந்தில் சிறப்பாக ஆடினாலும் அவர் கிரிக்கெட்டிற்கே முக்கியத்துவம் அளித்தார்.
5. கிரிக்கெட், கூடைப்பந்து என விளையாட்டில் பள்ளிப்பருவத்தில் தீவிரமாக இருந்தாலும் படிப்பிலும் மிகவும் தீவிரமாக இருந்துள்ளார். 12ம் வகுப்பில் 92.5 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
6. கடந்த 2023-24ம் ஆண்டு நடந்த 23 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கோப்பைக்கான தொடரில் டெல்லி அணியை வழிநடத்தியுள்ளார் ப்ரதிகா ராவல்.
7. தற்போது ப்ரதிகா ராவல் ரயில்வே அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடி வருகிறார்.
8. இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான 150வது வீராங்கனை ப்ரதிகா ராவல் ஆவார்.