கடந்த ஜூன் 29 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி. இதனைத்தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று (ஜூலை 6) தொடங்கியுள்ளது.


இந்தியா - ஜிம்பாப்வே மோதல்:


இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி மாதேவேரே மற்றும் இன்னசெண்ட் கயா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் இன்னசெண்ட் கயா ஒரு பந்து மட்டுமே களத்தில் நின்று டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வெஸ்லி உடன் பிரையன் பென்னட் ஜோடி சேர்ந்தார். இவர்களது ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 15 பந்துகள் வரை களத்தில் நின்ற பிரையன் பென்னட் 5 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 24 ரன்கள் எடுத்து ரவி பிஷ்னோய் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா களம் இறங்கினார். இதனிடையே தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வெஸ்லி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். சிக்கந்தர் ராசவுடன் டியான் மியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இவர்கள் நிதானமாக விளையாட சிக்கந்தர் ராசா அப்போது விக்கெட்டை பறிகொடுத்தார்.


19 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 17 ரன்கள் எடுத்தார். இதனைத்தொடர்ந்து களம் இறங்கிய ஜொனாதன் காம்ப்பெல் டக் அவுட் ஆகி வெளியேற அப்போது ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பர் கிளைவ் மடாண்டே களம் இறங்கினார். இவர் ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் எடுத்தார். அதேபோல் டியான் மியர்ஸ் 23 ரன்கள் எடுக்க பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ஜிம்பாப்வே அணி 115 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது.


இந்தியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே:


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் கலம் இறங்கினார்கள். இதில் அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களிலும், ரியான் பராக் 2 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுக்க மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் களம் இறங்கும் வீரர்களாகவது அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர்களும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்கள். அதாவது ரிங்கு சிங் டக் அவுட் ஆகி வெளியேற துருவ் ஜூரல் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே சுப்மன் கில் 31 ரன்களில் அவுட் ஆனார். இவ்வாறாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.