இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாவே சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கு கே.எல்.ராகுல் தலைமையிலான அணி களமிறங்கியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா உள்ளிட்ட வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை. அத்துடன் காயம் காரணமாக தொடரிலிருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். 


இந்நிலையில் ஜிம்பாவேயின் ஹராரே மைதானத்தில் இந்தியா-ஜிம்பாவே இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி நண்பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா இல்லாத காரணத்தால் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவாரா அல்லது மிடில் ஆர்டரில் இறங்குவாரா என்பது தெரியவில்லை. 


 






தொடக்க ஆட்டகாரரா ராகுல்?


இந்தச் சூழலில் கே.எல்.ராகுல் 2022 ஐபிஎல் தொடருக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் ஹெர்னியா அறுவை சிகிச்சை அதன்பின்னர் கொரோனா தொற்று என முற்றிலும் போட்டிகளிலிருந்து விலகியிருந்தார். இதன்காரணமாக அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்று பல வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் ராகுல் ஜிம்பாவே தொடருக்கு பிறகு ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளார். இதனால் அவருக்கு அதற்கு முன்பாக போதிய போட்டி பயிற்சி தேவை என்று கருதுகின்றனர். எனவே அவர் தொடக்க ஆட்டக்காரராக இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்பு அதிகம் உள்ளது. 


மிடில் ஆர்டரை பொறுத்தவரை ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினால் சுப்மன் கில், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள தீபக் சாஹர் அணியில் இடம்பெற்றுள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இவரும் அக்‌ஷர் பட்டேலும் ஆல் ரவுண்டர்களாக களமிறங்குவார்கள் என்று கருதப்படுகிறது. 


சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் நிச்சயம் களமிறங்குவார். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க அவருக்கு இத்தொடர் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆகவே அவரும் சிறப்பாக செயல்படு முயற்சி செய்வார் என்று கூறப்படுகிறது. 


இந்தியாவின் உத்தேச அணி:


கே.எல்.ராகுல்,ஷிகர் தவான், ராகுல் திரிபாதி/ ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்‌ஷர் பட்டேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சீராஜ் 


ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜிம்பாவே அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு ஆசிய கோப்பை கிரிக்கெட் யுஏஇயில் நடைபெற உள்ளது. அந்தத் தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண