ஆசிய கோப்பை 2022 தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார். முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காததால், கேப்டன் கே.எல் ராகுல் தன்னை நிரூபிக்க நினைத்து தொடக்க வீரராக ஷிகர் தவானுடன் களமிறங்கினார். ஆனால் இன்றைய போட்டியில் 1 ரன் மட்டும் அடித்து 2 வது ஓவர் வீசிய நியாட்சி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.
இதையடுத்து தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்த கேஎல் ராகுலை, நெட்டிசன்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். கேப்டன் என்ற முறையில் பொறுப்பாக ஆடி இருக்க வேண்டாமா..? இப்படியா ஒரு ரன்னில் வெளியேறுவது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 25. 4 ஓவர்களில் 167 ரன்கள் அடித்து ஜிம்பாவே அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.