இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ஆடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்தியா ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
தொடரை வெல்லும் முனைப்பில் நான்காவது டி20 போட்டி நேற்று புளோரிடாவில் இந்திய அணி களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யா குமார் யாதவ் களமிறங்கினர். களமிறங்கியது முதலே இருவரும் அதிரடி காட்ட, 5 ஓவரில் இந்திய அணியின் ரன் எண்ணிக்கை 50 ஐ கடந்தது.
சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ரோகித் சர்மா 16 பந்துகளில் 33 ரன்களில் அகேல் ஹொசின் பந்து வீச்சில் க்ளீன் போல்டானார். அதற்கு அடுத்த ஓவரிலேயே சூர்யா குமார் யாதவும் 24 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 21 ரன்னும், ரிஷப் பண்ட் 44 ரன்கள் அடித்து நடையைக்கட்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 6 ரன்கள் அடித்து ஏமாற்றமளித்தார்.
கடைசி நேரத்தில் சாம்சன், அக்சார் பட்டேல் ஜோடி அதிரடியில் இறங்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சஞ்சு சாம்சன் 30 ரன்களுடனும், அக்சார் பட்டேல் 20 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆரம்பத்தில் இருந்து அதிரடி முனைப்புடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. 22 ரன்களுக்குள் அந்த அணி அடுத்தடுத்து 2 விக்கெட்களை பறிகொடுக்க, கேப்டன் பூரனும் தன் பங்கிற்கு 24 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆனார்.
அடுத்து உள்ளே வந்த ரோவ்மன் பவுல் மட்டும் அந்த அணியில் ஓரளவு தாக்கு பிடித்து விளையாட, மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் விக்கெட் மளமளவென விழுந்தது. ரோவ்மன் பவுல் 24 ரன்கள் அடித்து அக்சார் பந்தில் அவுட்டாக, 19.1 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்களுக்குள் சுருண்டது.
இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் 3- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி சார்பில் அதிகப்பட்சமாக அர்ஷீப்தீப் 3 விக்கெட்களும், ஆவேஷ்கான், அக்சார் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். முக்கிய இரண்டு விக்கெட்களை கைப்பற்றிய ஆவேஷ்கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்