தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் தோல்விக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது. மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா அணி விளையாட உள்ளது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 6-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. 


இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இதுவரை ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர் 31 இன்னிங்ஸில் 1523 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் 3 சதம் மற்றும் 11 அரைசதம் விளாசியுள்ளார்.  மேலும் இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக  3 முறை பிற வீரர்களுடன் ஜோடி சேர்ந்து 200 ரன்கள் மேல் அடித்துள்ளார். அந்து எந்தெந்த போட்டிகள்?


246- ரோகித்-கோலி (2018):




2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்தது. அப்போது முதல் ஒருநாள் போட்டி குவஹாத்தியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 322 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் 4 ரன்கள் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம்பார்த்தனர். இருவரும் 2ஆவது விக்கெட்டிற்கு 246 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி 140 ரன்களும், ரோகித் சர்மா 152* ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 


211-ரோகித்-ராயுடு(2018):




2018 வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. அதில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 162 ரன்கள் விளாசினார். இவரும் அம்பத்தி ராயுடுவும் 3ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் விரட்டினர். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டிற்கு 211 ரன்கள் சேர்த்தது. ராயுடு 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 


227-ரோகித்-கே.எல்.ராகுல்(2019):


2019ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்தது. அதில் இரண்டாவது ஒருநநள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரராகளாக களமிறங்கிய ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 




இருவரும் முதல் விக்கெட்டிற்கு 227 ரன்கள் சேர்த்து அசத்தினர். கே.எல்.ராகுல் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 159 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்தப் போட்டியை இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இவ்வாறு கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற இரண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் ரோகித் சர்மா தொடர்ந்து அசத்தியுள்ளார். இம்முறை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒருநாள் கேப்டனாக களமிறங்க உள்ளார். ஆகவே இந்தத் தொடரிலும் சிறப்பாக விளையாடுவார் என்று கருதப்படுகிறது. 


மேலும் படிக்க: எனக்கு நானே.. எப்பவுமே.. வைரலாகும் விராட் கோலியின் புதிய ட்விட்டர் போஸ்ட்..