இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டி20 தொடரையும் இழந்துள்ளது. இந்த நிலையில், இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டதால் இந்திய அணி இந்த போட்டியில் எந்தவித பதற்றமுமின்றி ஆடும். அதேசமயத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்பதால் ஆக்ரோஷமாக ஆடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் இதுவரை பார்ம் இல்லாமல் தவித்து வந்த விராட்கோலி, ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பினர். வெங்கடேஷ் அய்யரும் கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டினார்.
இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டதால், கடந்த இரு போட்டிகளிலும் களமிறங்காத ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்கள் ஆடும்வெனில் களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோல, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா. ஹர்துல் தாக்கூர், ஆவேஷ்கான் ஆகியோரும் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஒருநாள் தொடரை ஒயிட்வாஷ் ஆகி இழந்துள்ளதால், டி20 தொடரில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் முனைப்புடன் ஆடும். அந்த அணியில் தொடக்க வீரர்கள் பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ் சிறப்பான தொடக்கம் அளித்தால் அந்த அணி இமாலய ரன்களை குவிக்கும். கடந்த போட்டியில் மிரட்டிய நிகோலஸ் பூரண் – ரோவ்மென் பாவெல் கூட்டணி இந்த போட்டியிலும் மிரட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் தனது அதிரடியான பேட்டிங்கை இதுவரை காட்டவில்லை. பந்துவீச்சில் ராஸ்டன் சேஸ் அச்சுறுத்தலாக இருக்கிறார். மேலும், ஜேசன் ஹோல்டரும் தனது பார்முக்கு திரும்பினால் வெஸ்ட் இண்டீஸ் நிச்சயம் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கும். கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இந்த போட்டி மாலை 7 மணியளவில் தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். இரு அணிகளும் இதுவரை மோதிய டி20 போட்டிகளில் இந்தியா 12 போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்