அகமதாபாத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி  96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றது.




அகமாதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் 13 ரன்களிலும், விராட்கோலி ரன் ஏதுமின்றியும், ஷிகர் தவான் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 42 ரன்களில் ஸ்ரேயாஸ் அய்யரும், ரிஷப் பண்டும் ஜோடி சேர்ந்தனர். அணியை சரிவில் இருந்து மீட்ட இந்த ஜோடி 152 ரன்கள் எட்டியபோது பிரிந்தது. ரிஷப் பண்ட் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.


அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய 111 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் தீபக் சாஹரும், வாஷிங்டன் சுந்தரும் அதிரடியாக ஆடினர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்கள் எடுத்தது. தீபக் சாஹர் 38 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.




266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. கடந்த இரு போட்டிகளிலும் சோபிக்காத ஷாய் ஹோப் இந்த போட்டியிலும் 5 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார், பிரண்டன் கிங் 14 ரன்களில் ஆட்டமிழக்க, கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஷாம்ரா ப்ரூக்ஸ் டக் அவுட்டாகியும் வெளியேறினர். கேப்டன் நிகோலஸ் பூரண் மட்டும் சற்று நேரம் பொறுப்புடன் ஆடினர்.


ஆனால், ஜேசன் ஹோல்டரும், பாபியன் ஆலனும் அடுத்தடுத்த ஆட்டமிழக்க 34 ரன்கள் எடுத்த நிகோலஸ் பூரணும் ஆட்டமிழந்தார். 87 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஓடீன் ஸ்மித் – அல்ஜாரி ஜோசப் ஜோடி உதவியால் அணி 100 ரன்களை கடந்தது. ஓடீன் ஸ்மித் அதிரடியாக ஆடினார். அவர் 3 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 18 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அல்ஜாரி ஜோசப்பும் 29 ரன்கள் எடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 37.1 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.




இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். குல்தீப் யாதவ், தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டுகுளை கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்திய அணிக்கு முழு நேர ஒருநாள் போட்டி கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தனது முதல் ஒருநாள் போட்டித் தொடரிலே எதிரணியை ஒயிட்வாஷ் செய்து தனது கேப்டன்சியை தொடங்கியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண