இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் நாளான நேற்று ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும், சுப்மன்கில் 20 ரன்களுடனும் இன்று ஆட்டத்தை தொடங்கினார்.
518 ரன்கள் குவித்த இந்தியா:
ஆனால், துரதிஷ்டவசமாக ஜெய்ஸ்வால் 175 ரன்களில் ரன் அவுட்டாக அவரது இரட்டை சத கனவு தகர்ந்தது. இதையடுத்து, கேப்டன் சுப்மன்கில் நிதிஷ் ரெட்டி மற்றும் துருவ் ஜோரல் இருவருடனும் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினார். நிதிஷ் ரெட்டி 43 ரன்களில் அவுட்டாக, கேப்டன் சுப்மன்கில் சதம் விளாசினார். இந்திய அணி 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. கில் 129 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
இந்தியா முதல் இன்னிங்சில் மிகப்பெரிய ஸ்கோரை குவித்த நிலையில், முதல் இன்னிங்சைத் தொடங்கியது வெஸ்ட் இண்டீஸ். கடந்த டெஸ்டைப் போலவே இந்த டெஸ்டிலும் இந்தியா சுழல் தாக்குதல் நடத்தியது. ஜடேஜா, குல்தீப் யாதவ் சுழலில் அசத்தினர்.
தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்:
தொடக்க வீரர் கேம்ப்பெல் 10 ரன்களில் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரரான ஜாம்பவான் சந்தர்பாலின் மகன தகேநரேன் அதானசே-வுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைத்தாலும் இருவரும் நிதானமாகவே ஆடினர். சிறப்பாக ஆடிய தகேநரேன் 34 ரன்களில் அவுட்டானார். அவர் 67 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் ஜடேஜா சுழலில் சிக்கி அவுட்டானார்.
அவர் ஆட்டமிழந்த பிறகு நட்சத்திர வீரர் ஷாய் ஹோப் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அதானாசே அரைசதம் நோக்கி முன்னேறினார். ஆனால், அவர் குல்தீப் சுழலில் அவுட்டானார். அவர் 84 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 41 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து கேப்டன் சேஸ் வந்தார், அவர் ஜடேஜா சுழலில் டக் அவுட்டானார்.
ஃபாலோ ஆன் ஆகுமா?
2வது நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியை காட்டிலும் 378 ரன்கள் பின்தங்கி உள்ளது. ஷாய் ஹோப் 31 ரன்களிலும், டெவின் இம்லாச் 14 ரன்களிலும் ஆடி வருகின்றனர்.
கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் 378 ரன்களை எப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி கடக்கப்போகிறது? என்பது சந்தேகம் ஆகும். இதனால், அவர்கள் ஃபாலாே ஆன் ஆவதற்கே வாய்ப்புகள் பிரகாசம் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபாலோ ஆன் ஆனாலும் அவர்களுக்கு சிரமமே ஆகும்.
பந்துவீச்சு ஆதிக்கம்:
மைதானத்தில் சுழல் ஆதிக்கம் உள்ளதால் ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் நாளை அசத்துவார்கள் என்றே கருதப்படுகிறது. மேலும், பும்ரா, சிராஜ் வேகத்தில் அசத்த காத்துள்ளனர். இதனால், இந்தியாவின் பந்துவீச்சை வெஸ்ட் இண்டீசின் டெயிலண்டர்கள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.