வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 150 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.  360 பந்துகளை எதிர்கொண்டுள்ள இவர், 15 பவுண்டரிகள் விளாசி 150 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிரட்டலான எண்ட்ரீ கொடுத்துள்ளார் என கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 


முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சந்தித்த 118 ஓவர்களில் 2 விக்கெட்டைன் இழந்து 323 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றதுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது. 


இதேபோல், தனது அறிமுகப் போட்டியில் 150 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் என்ற பெருமையை ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்நிலையில், இவர்களுடன் ஜெய்ஸ்வாலும் இணைந்துள்ளார்.


ஷிகர் தவான் 2013 ஆம் ஆண்டு மொஹாலி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டில் களமிறங்கினார். அந்த போட்டியில் வெறும் 174 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட ஷிகர் தவான் 33 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என்று மொத்தம் 187 ரன்கள் அடித்து அறிமுகப் போட்டியில் ஒரு ருத்ரதாண்டவத்தையே ஆடியிருந்தார்.. இந்திய அளவில் இவர் தான் இதுவரை அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையுடனும் உள்ளார். 


அதேபோல், ரோகித் ஷர்மா 2013 ஆம் ஆண்டு கொல்கத்தா உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டில் களமிறங்கினார். அந்த போட்டியில் 177 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த மைதானம் ரோகித் சர்மாவுக்கு மிகவும் ராசியான  மைதானம் என்பதும், இங்குதான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசினார் என்பதும் கூடுதல் தகவல். 


யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலைப் பொறுத்தவரையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களில் இவரும் ஒருவர். மேலும், கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான இந்தியாவில் இருந்து இங்கிலாந்து பறந்த இந்திய அணியில் இவருக்கும் இடம் கிடைத்தது. மேலும், இந்திய அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸில் முத்தரப்பு கிரிக்கெட்டில் விளையாடிவரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதுடன், தொடக்க வீரராகவும் களமிறங்கினார். மேலும், தனது இந்த தொடரின் முதல் பந்தையும் இவர் தான் எதிர்கொண்டார். அறிமுகப்போட்டியில் போட்டியின் முதல் பந்தை எதிர்கொண்ட ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.