வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினின் ஓவல் மைதானத்தில் இன்று இந்திய அணி களமிறங்கும் போட்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி ஆகும். 1970-80 கால கட்டத்தில் ஜாம்பவானாக உலா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ள 100வது டெஸ்ட் போட்டி ஆகும்.


100வது டெஸ்ட்:


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 21 ஆண்டுகாலமாக இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடைந்ததே இல்லை என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளது. இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் 1948ம் ஆண்டு முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் ஆடின. அந்த போட்டிக்கு லாலா அமர்நாத் கேப்டனாக இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான் காட்டர்ட் கேப்டனாக இருந்தார். அந்த போட்டி டிராவில் முடிந்தது.


இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை ஆடிய போட்டிகளில் 46 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது. 23 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 30 டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ளது.


இங்கிலாந்து, ஆஸ்திரேலியா:


இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டுமின்றி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராகவும் 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 1933ம் ஆண்டு முதன்முறையாக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் ஆடியது. அந்த போட்டிக்கு சி.கே. நாயுடு கேப்டனாக இருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


இந்தியாவும், இங்கிலாந்து அணியும் இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளன. இதில் 31 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, 50 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதர போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது. அதேபோல, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா இதுவரை 107 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. இரு அணிகளும் முதன்முறையாக 1947ம் ஆண்டு விளையாடியது. அந்த போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக லாலா அமர்நாத் செயல்பட்டார். இதில், இந்திய அணி 32 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலிய 45 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.


இந்தியா இதுவரை 571 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 173 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, 176 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 221 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. 1 போட்டி டையில் முடிந்துள்ளது. சர்வதேச அளவில் 1000 டெஸ்ட் போட்டிகள் ஆடிய ஒரே அணி இங்கிலாந்து மட்டுமே. 500க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் ஆடிய அணிகள் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆகும்.


ஒவ்வொரு அணிக்கு எதிரான விவரம்:


இங்கிலாந்து – 131 டெஸ்ட்


ஆஸ்திரேலியா – 107 டெஸ்ட்


வெஸ்ட் இண்டீஸ் – 100 டெஸ்ட் ( இன்று விளையாடப் போவது 100வது டெஸ்ட்)


இலங்கை   - 46 டெஸ்ட்


ஜிம்பாப்வே – 11 டெஸ்ட்


பாகிஸ்தான் – 59 டெஸ்ட்


வங்காளதேசம் – 13 டெஸ்ட்


ஆப்கானிஸ்தான் – 1 டெஸ்ட்


நியூசிலாந்து – 62 டெஸ்ட்


தென்னாப்பிரிக்கா – 42 டெஸ்ட்


மேலும் படிக்க: Stuart Broad 600th Wicket: 600 விக்கெட்டுகள்... டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்... வரலாறு படைத்த ஸ்டூவர்ட் பிராட்..!


ICC Test Rankings: டாப் 10-க்குள் நுழைந்த ரோஹித் சர்மா.. அஷ்வின் தொடர்ந்து முதலிடம்.. வெளியான டெஸ்ட் தரவரிசை பட்டியல்!