ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஹாங்காங்கை வீழ்த்திய நிலையில், இன்று இரண்டாவது போட்டியில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் மோதின.
பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா:
சூர்யகுமார் யாதவ், சுப்மன்கில், பாண்ட்யா, பும்ரா என பலமிகுந்த படையாகவே இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஐக்கிய அரபு அமீரகம் அணிக்காக கேப்டன் வசீம் - ஷராஃபு நல்ல தொடக்கம் தந்தனர். அனுபவம் இல்லாத அவர்கள் பாண்ட்யா, பும்ரா பந்துவீச்சை நன்றாக எதிர்கொண்டனர்.
அதிரடியாக ஆடிய ஷராஃபுவை பும்ரா போல்டாக்கினார். பும்ரா பந்தில் அவர் 17 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 22 ரன்னில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் அடுத்து ஷோகைப் 2 ரன்னில் அவுட்டானார். அதன்பின்னர், ஐக்கிய அரபு அமீரக விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் வாசிமும் 22 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
58 ரன்கள் டார்கெட்:
48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த ஐக்கிய அரபு அமீரகம் அதன்பின்னர் மிக மோசமாக விக்கெட்டுகளை இழந்தது. வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க 13.1 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் வாசிம் மற்றும் ஷராஃபு மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டானார்கள்.
இந்திய அணிக்காக குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷிவம் துபே 3 வி்க்கெட்டுகள் வீழ்த்தினார். பும்ரா, அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குல்தீப்யாதவ் 2.1 ஓவர்களில் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
சிக்ஸர், பவுண்டரி மழை:
பின்னர், 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, சுப்மன்கில் ஆட்டத்தை தொடங்கினர். அபிஷேக் சர்மா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இலக்கும் குறைவு என்பதால் இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறியது.
சிக்ஸரும், பவுண்டரியும் விளாசிய அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசி அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிக்க 4.3 ஓவர்களில் இந்தியா 60 ரன்களை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மன்கில் 9 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 20 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 2 பந்தில் 1 சிக்ஸருடன் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தானுடன் மோதல்:
ஆசிய கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா வரும் 14ம் தேதி பாகிஸ்தானுடன் விளையாட உள்ளது. அந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளது. ஏராளமான இளம் வீரர்களுடன் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியுள்ளது.