இந்திய கிரிக்கெட் அணி இலங்கை தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட  உள்ளது. இந்த நிலையில், நேற்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.


கேப்டன்சி:


ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் என்பதால் இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


அணி தேர்வு பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் துணை கேப்டனாகவும், தொடர் முழுக்க பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கியவருமாக திகழ்ந்தவர் ஹர்திக் பாண்ட்யா. அவருக்கு டி20 தொடரில் கேப்டன்சி வழங்கப்படும் என்று எதிர்பார்த்த சூழலில், சூர்யகுமார் யாதவிற்கு வழங்கப்பட்டது.


சுப்மன்கில்லுக்கு துணை கேப்டன் பதவி:


அதேபோல, டி20 மற்றம் ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக யாரும் எதிர்பாராத வகையில் சுப்மன்கில் நியமிக்கப்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை வழிநடத்தினார்.


ஆனால், இலங்கை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய ஒருநாள் தொடருக்கான அணியில் ஏற்கனவே இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுல் அணியில் உள்ளார். அவர் அணியில் இருக்கும்போது அனுபவமுற்ற சுப்மன்கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டிருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது.


அணிக்கு சாதகமா? பாதகமா?


அதேபோல, டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு கேப்டன்சி வழங்காமல் சூர்யகுமார் யாதவிற்கு வழங்கப்பட்டது போலவே, அந்த தொடரிலும் சுப்மன்கில்லிற்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


கம்பீரின் இந்த நடவடிக்கை அணிக்கு சாதகத்தை ஏற்படுத்துமா? அல்லது பாதகத்தை ஏற்படுத்துமா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதிர்கால கேப்டனாக சுப்மன்கில்லை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையா? அல்லது கம்பீரின் தனிப்பட்ட தலையீடு காரணமா? இந்த நடவடிக்கையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


மேலும், ஒருநாள் போட்டிகளில் ரிங்குசிங், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது, இரண்டு தொடர்களிலும் ருதுராஜூக்கு வாய்ப்பு வழங்கப்படாததும் கம்பீரின் தனிப்பட்ட தலையீடா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.