இந்தியா - இலங்கை:
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி 3-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி இருந்தது. இதனைத்தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி விளையாடி வருகிறது.
அதன்படி முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதற்கு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கம்பீர் தான் காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ரோஹித் ஷர்மா - விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்திருக்கலாம்:
இச்சூழலில் தான் கம்பீரின் நடவடிக்கைகள் குறித்து குஜராத் அணியின் பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ரா பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "இந்திய அணி அடுத்த ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. இதனால் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளர் என்பதை அறிவேன். அதற்காக சீனியர் வீரர்களுடன் நேரம் செலவிட வேண்டும் என்பது தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரையும் கம்பீர் நன்றாக அறிவார். இரு வீரர்களின் மனநிலையையும் புரிந்து கொள்ள கம்பீர் ஒன்றும் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது.
இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடர் கம்பீருக்கு அருமையான வாய்ப்பு. புதிய வீரர்களை வைத்தே அவர் இந்த தொடரில் விளையாடி இருக்கலாம். ஒரு நாள் தொடர்பான திட்டங்களை கம்பீர் மாற்றியிருக்கலாம்.ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்திருந்தால், கம்பீர் நினைத்ததை போல் இடது - வலது காம்பினேஷனில் எளிதாக இந்திய அணியை மாற்றியிருக்க முடியும்"என்று கூறியுள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா.