இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 357 ரன்கள் எடுத்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. அப்போது சிறப்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் ஜடேஜா சதம் விளாசி அசத்தினார். இறுதியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கடைசி வரை ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 3 சிக்சர்கள் மற்றும் 17 பவுண்டரிகளுடன் 175 ரன்களுடன் இருந்தார். 

இதைத் தொடர்ந்து இலங்கை அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. இலங்கை  அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் திமுத் கருணரத்னே மற்றும் லஹீரு திரிமானே ஆகியோர் நிதானமான துவக்கத்தை வழங்கினர். 17 ரன்கள் எடுத்திருந்த போது திரிமானே அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 28 ரன்களுடன் கேப்டன் திமுத் கருணரத்னேவும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த அனுபவ வீரர் அஞ்சிலோ மேத்யூஸ் 22 ரன்களுடன் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வந்தனர். அதன்விளைவாக டி சில்வா 4 ரன்களில் ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச்சில் ஒரு ரன்னிற்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம் இந்திய அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 432 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அத்துடன் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ஹட்லியின் சாதனையையும் முறியடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 11ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

 

இந்தியா சார்பில் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர்கள்:

வீரர்கள் டெஸ்ட் போட்டிகள் விக்கெட்கள் 
அனில் கும்ப்ளே 132   619
கபில்தேவ்  131 434
ரவிச்சந்திரன் அஸ்வின் 85*  432
ஹர்பஜன் சிங்    103 417

ரவிச்சந்திரன் அஷ்வின் நாளை இன்னும் இரண்டு விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் இந்திய வீரர் கபில்தேவின் சாதனையை சமன் செய்வார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 434 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியில் கபில்தேவ் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதையும் ரவிச்சந்திரன் அஷ்வின் நாளை சமன் செய்து தாண்டுவாரா என்பதை பொறுத்திருந்தான் தான் பார்க்க வேண்டும். இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 108 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்துள்ளது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இலங்கை அணி 466 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:பாசம் வைக்க நேசம் வைக்க.! அவசரமாய் ஓடிய கோலி, நின்று அழைத்த ரோகித்! மாறாத நட்பின் வைரல் வீடியோ!