இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி20 போட்டியில், 82 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியது. 


குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.


அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 16.7 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்களில் ஆட்டமிழந்தது.


இந்நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளன. இதனால் ஐந்தாவது டி20 போட்டி குறித்த எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.


இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.


தொடக்க வீரர் ருதுராஜ் அணியின் ஸ்கோர் 13 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்களில் அவுட்டாகினார். தொடக்க வீரர் இஷான் கிஷான் ஓரளவு அதிரடியாக ஆடினர்.


அவரும் 26 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார். கேப்டன் ரிஷப்பண்ட் நிதானமாக ஆடினார். ஆனால், அவர் 23 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார். இதனால், இந்திய அணி 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.


இதையடுத்து, துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, தினேஷ் கார்த்திக் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் விளாசினார். இதனால், இந்திய அணியின் ரன் விறுவிறுவென எகிறியது. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்ட்யா 31 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.





பவுண்டரிகளாக விளாசிய தினேஷ் கார்த்திக் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் அவுட்டாகினார். அவர் 27 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 55 ரன்கள் விளாசி  அவுட்டாகினார். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை விளாசியது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவு அடுத்தடுத்து விக்கெட்டுகளை சரமாரியாக இழந்தது. இதனால் 16.7 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்களில் ஆட்டமிழந்தது.

 

ஐ.பி.எல். தொடரில் அசத்திய தினேஷ் கார்த்திக் இந்தப் டி 20 போட்டியில் அசத்தியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.