இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் இன்று (ஜூன்.14) நடைபெற்ற 3ஆவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
முதலில் தென் ஆப்பிரிக்கா பவுலிங்
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி வீரர்கள் ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இருவரும் தொடக்க முதலே அதிரடி காட்டினர்.
இதனால் இந்திய அணியின் ரன் வேகம் உயர்ந்தது. ருத்துராஜ் கெய்க்வாட் 57 ரன்களும், இஷான் கிஷன் 54 ரன்களும் விளாசி நல்ல தொடக்க கொடுத்தாலும், பின்னால் வந்த வீரர்கள் அதனைப் பயன்படுத்த தவறினர்.
கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா 31 ரன்கள் விளாச இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் இலக்கு
இதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்து வெற்றி பெறும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணி எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முந்தைய போட்டிகள்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டேவிட் மில்லர் மற்றும் வான்டர் டுசென் இருவரின் அதிரடியால் வெற்றி பெற்றது.
இதேபோல் ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய க்ளாசன் அரைசதம் அடிக்க, தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் இன்றைய வெற்றியை அடுத்து 5 போட்டிகள் கொண்ட இத்தொடர் 2-1 என்ற கணக்கை எட்டியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்