பெங்களூரில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான பகலிரவு மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இரண்டாவது நாளான இன்று இலங்கை அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு சுருண்டது. இந்திய பந்துவீச்சாளர் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.




இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வாலும், கேப்டன் ரோகித் சர்மாவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மயங்க் அகர்வால் 22 ரன்கள் எடுத்த நிலையில், எம்புல்டேனியா பந்தில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரோகித்தும்- ஹனுமா விஹாரியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


அணியின் ஸ்கோர் 98 ஆக உயர்ந்தபோது ரோகித் சர்மா 79 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஹனுமா விஹாரி 35 ரன்களில் அவுட்டானார். பின்னர், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் விராட்கோலி களமிறங்கினார். பெங்களூர் அவருக்கு ராசியான மைதானம் என்பதால் , கோலி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், அவர் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஜெயவிக்ரமா பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.




பின்னர், ரிஷப் பண்ட் களமிறங்கினார். அவர் களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடினார். அவர் மைதானத்தில் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்துக் கொண்டிருந்தார். அவர் 29 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் அதிவேகமாக அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் ஜெயவிக்ரமா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனாலும், ரிஷப் பண்ட் அதிரடியால் இந்திய அணியின் ரன்ரேட்டும், ஸ்கோரும் எகிறியது.


உணவு இடைவேளைக்கு பிறகு தற்போது வரை இந்திய அணி 52 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.  கடந்த இன்னிங்சில் தனி ஆளாக போராடிய ஸ்ரேயாஸ் அய்யர் 29 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இலங்கையை விட 359 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.




இந்த போட்டியிலும் இந்திய அணியின் கையே ஓங்கியிருக்கிறது. ஆட்டம் முடிவடைய இன்னும் மூன்று நாட்கள் இருப்பதாலும், இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதாலும் இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயிக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண