இந்திய கிரிக்கெட் வரலாற்றையும், உலக கிரிக்கெட் வரலாற்றையும் தோனியின் பெயர் தவிர்த்து எழுதவே முடியாது. கேப்டனாக இந்திய அணிக்கு உலகக் கோப்பை, ஐ.பி.எல். கோப்பை என அவர் பெற்றுத்தந்த வெற்றிகள் ஏராளம். இன்றைய 2கே கிட்ஸ் பலரும் தோனியை கேப்டன்சியில் வெற்றி பெற்ற தோனியையே பார்த்திருப்பார்கள். தோனியின் ஆரம்ப கால அதிரடி பேட்டிங்கை பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவு.


தோனி எனும் சூறாவளி:


தோனி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 148 ரன்கள் விளாசி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த சூழலில், இந்திய அணியின் புதிய அதிரடி நட்சத்திரமாக இந்தியாவின் கில்கிறிஸ்ட் என்று புகழாரம் சூடப்பட்டிருந்தார். அப்போது, களத்தில் தோனி இருந்தால் சேஸிங் பற்றி கவலையே இல்லையே என்ற எண்ணத்தை தோனி முதன்முதலில் உருவாக்கியது 2005ம் ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் ஆகும்.


2005ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் 3வது ஒருநாள் போட்டி நடந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி குமார் சங்ககராவின் அபார சதத்தால் 298 ரன்களை குவித்தது. 2005 காலகட்டத்தில் 50 ஓவர்களில் 300 ரன்களை எட்டுவது என்பது மிக மிக கடினமான ஒன்றாகும். இந்திய அணிக்காக ஆட்டத்தை தொடங்கிய சச்சின் 2 ரன்களில் அவுட்டாக, சேவாக்குன் ஜோடி சேர்ந்தார் தோனி.


சிக்ஸர் மழை:






களமிறங்கிய 2வது பந்திலேயே சிக்ஸர் அதிரடியை ஆரம்பித்தார் தோனி. மறுமுனையில் பவுண்டரிகளை விளாசிய ஓரிரு ரன்களாக எடுத்து ஆடிக் கொண்டிருந்த சேவாக் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த டிராவிட்டை மறுமுனையில் வைத்துக் கொண்டு தோனி தனி ஆளாக ஆட்டத்தை நகர்த்தினார்.


இதனால், இந்தியாவின் ரன் தடையின்றி ஏறியது. தோனியை வீழ்த்த சமிந்தா வாஸ், பெர்னாண்டோ, மகரூஃப், முத்தையா முரளிதரன், உபுல் சந்திரா, தில்ஷான் பந்து வீசினர். ஆனால், அவர்களது பந்துகளை பவுண்டரி, சிக்ஸரை தோனி விளாசினார். சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசிய தோனி சதம் அடித்தார். ராகுல் டிராவிட் 28 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த யுவராஜ் சிங் 18 ரன்களில் ஆட்டமிழக்க சதம் அடித்த தோனி பட்டாசாய் கொளுத்திக் கொண்டிருந்தார்.


தனி ஆளாக இலக்கை எட்டி அசத்தல்:


வேணுகோபால் ராவை மறுமுனையில் வைத்துக் கொண்டு தோனி ஆட்டத்தை விறுவிறுப்பாக இலக்கை நோக்கி நகர்த்தினார். கடைசியாக இந்திய அணி 46.1 ஓவர்களில் 303 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 145 பந்துகளில் 15 பவுண்டரி 10 சிக்ஸருடன் 183 ரன்களை எடுத்தார். ஒருநாள் போட்டியில் தோனியின் அதிகபட்ச ஸ்கோர் அதுவே ஆகும். இந்த இன்னிங்சை இந்தியா முதல் பேட்டிங் பிடித்து தோனி ஆடியிருந்தால் உலக ஆடவர் கிரிக்கெட் அரங்கில் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கூட படைத்திருக்கலாம்.


வெறும் 24 வயதே நிரம்பிய தோனி அன்று ஆடிய ஆட்டத்தை கண்டு அனைவரும் பிரம்மித்தே போனார்கள். தோனியின் அந்த ஆட்டத்தை நேரிலும், தொலைக்காட்சியிலும் பார்த்தவர்களுக்கு அது ஒரு விருந்தாகவே அமைந்தது. இன்றளவும் தோனியின் மறக்க முடியாத ஆட்டத்தை தல தோனி ஆடியது 2005ம் ஆண்டு இதே அக்டோபர் 31ம் தேதியில்தான் ஆகும்.