இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. இந்திய அணியின் 35ஆவது டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் மயாங்க் அகர்வால் நிதான துவக்கத்தை அளித்தனர். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது ஆட்டத்தின் 39ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் விராட் கோலி ஒரு ரன் எடுத்தார். இதன்மூலம சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்கள் கடந்து அசத்தினார். மேலும் 100ஆவது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2006ஆம் ஆண்டு தன்னுடைய 100ஆவது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்து அசத்தியிருந்தார்.
அத்துடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த 6ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். மேலும் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த 5ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அதிவேகமாக 8000 டெஸ்ட் ரன்களை கடந்த இந்திய வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர்- 154 இன்னிங்ஸ்
ராகுல் டிராவிட்-157 இன்னிங்ஸ்
சேவாக்-160 இன்னிங்ஸ்
சுனில் கவாஸ்கர்-166 இன்னிங்ஸ்
விராட் கோலி-169 இன்னிங்ஸ்
விவிஎஸ் லக்ஷ்மண்- 201 இன்னிங்ஸ்
இந்தப் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஹனுமா விஹாரியும் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சற்று முன்பு வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்