இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. அசலன்கா பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சிறப்பாக பந்துவீச தொடங்கிய ஜடேஜா டிக்வெலா,லக்மல், ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா என அடுத்தடுத்து 4 விக்கெட் எடுத்து அசத்தினார். இதன்மூலம் 41 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய பேட்டிங்கின் போது ரவீந்திர ஜடேஜா 175* ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின்னர் பந்துவீச்சில் 5 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒரே போட்டியில் 150 ரன்களுக்கு மேல் அடித்து 5 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜடேஜா இணைந்துள்ளார்.
ஒரே டெஸ்டில் 150 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டிற்கு மேல் எடுத்த வீரர்கள்:
விநோ மன்கட்- (184 & 5/196) v இங்கிலாந்து (1952)
டெனிஸ் அட்கின்சன் - (219 & 5/56) v ஆஸ்திரேலியா (1955)
கேரி சோபர்ஸ்-(174 & 5/41) v இங்கிலாந்து (1966)
முஸ்டாக் முகமது-(201 & 5/49) v நியூசிலாந்து (1973)
ரவீந்திர ஜடேஜா (175* & 5/41) v இலங்கை (2022)
இலங்கை அணியை மீண்டும் ஃபாலோ ஆன் செய்ய இந்திய அணி கேட்டு கொண்டுள்ளது. ஃபாலோ ஆன் செய்த இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் லஹிரு திரிமானா அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்