இந்தியா- இலங்கை எதிரான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷனும், அறிமுக வீரர் சுப்மன் கில்லும் களமிறங்கினர். 


தொடக்கம் முதலே இஷான் கிஷன் அதிரடியில் ஈடுபட, இரண்டு ஓவர்களிலேயே இந்திய அணி 20 ரன்களை தொட்டது. தொடர்ந்து அறிமுக வீரராக களமிறங்கிய சும்பன் கில் 5 பந்துகளில் 1 பவுண்டரிகளுடன் 7 ரன்களில் வெளியேறினார். 






அவரை தொடர்ந்து களமிறங்கிய துணை கேப்டன் சூர்யகுமார் யாதவும் 7 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து, நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உள்ளே வந்த சஞ்சு சாம்சன் 5 ரன்களில் அதிர்ச்சியளித்தார். 


ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் 29 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர் அடித்து 37 ரன்களில் ஹசரங்கா பந்தில் தனஞ்சயாவிடம் கேட்சானார். 


மறுமுனையில், களமிறங்கியது முதல் ஹர்திக் பாண்டியா அதிரடியில் ஈடுபட்டார். 27 பந்துகளில் 29 ரன்கள் அடித்த அவர், மதுஷங்க பந்தில் விக்கெட் கீப்பர் குசல் மெண்டீஸிடம் கேட்ச் கொடுத்தார். வரிசையாக விக்கெட்கள் விழுந்ததால் இந்திய அணி ஒரு கட்டத்தில் 94 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து  தடுமாறியது. 


அடுத்ததாக உள்ளே வந்த தீபக் ஹூடா, இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறவிட்டார். தீபக் ஹூடாவுடன் இணைந்த அக்சார் படேல் தேவையான நேரத்தில் எல்லை கோட்டுக்கு பந்துகளை விரட்டினர். இந்த ஜோடி இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 






 


கடைசி ஓவரில் தீபக் ஹூடா மற்றும் அக்ஸார் படேல் இணைந்து 13 ரன்கள் குவிக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. 


தீபக் ஹூடா 23 பந்துகளில் 41 ரன்களுடனும், அக்சார் படேல் 20 பந்துகளில் 31 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். 


இந்திய அணி விவரம்:


இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஹர்ஷல் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்


இலங்கை அணி விவரம்:


பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க