அசாம் மாநிலம் கவுகாத்தியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்த போட்டியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித்சர்மா அணிக்கு திரும்பினார்.


இதையடுத்து, இந்தியாவின் பேட்டிங்கை சுப்மன்கில் – ரோகித்சர்மா ஜோடி தொடங்கினர். இருவரும் இணைந்து நிதானமாகவும், அதேசமயம் பொறுப்பாகவும் ஆடினர். இதனால் இந்தியாவின் ரன்ரேட் இருவரது பேட்டிங்காலும் தொடர்ந்து சீராக இருந்து கொண்டே இருந்தது. இருவரும் சிறப்பாக ஆடிய சுப்மன்கில், ரோகித்சர்மா அரைசதம் விளாசினர்.




சிறப்பாக ஆடிய சுப்மன்கில் 70 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ரோகித்சர்மா அதிரடியாக ஆடினார். அவருடன் விராட்கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய ரோகித்சர்மா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 173 ரன்களை இந்தியா எட்டியபோது ரோகித்சர்மா அவுட்டானார். அவர் 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.


அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். மறுமுனையில் விராட்கோலி நிதானமாக ஆடினார். அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் 24 பந்துகளில் 28 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் விராட்கோலி 52 ரன்களில் அளித்த கேட்ச் வாய்ப்பை இலங்கை விக்கெட் கீப்பர் கோட்டை விட்டார்.


பின்னர், கே.எல்.ராகுல் பொறுமையாக ஆடினார். கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினார். அணியின் ஸ்கோர் 303 ரன்களை எட்டியபோது கே.எல்.ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் மைதானத்தில் நங்கூரமாக நின்ற விராட்கோலி ஒருநாள் போட்டியில் தனது 45வது சதத்தை விளாசினார்.




2023ம் ஆண்டில் விராட்கோலி தான் ஆடிய முதல் போட்டியிலே சதத்துடன் தொடங்கியிருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களை எடுத்தது. தற்போது ஷமி 4 ரன்களுடனும், சிராஜ் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


இலங்கை அணியில் 7 பேர் பந்துவீசினர். இந்த போட்டியில் விராட்கோலி, ரோகித்சர்மா இருவரும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.