தென்னாப்பிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், பார்ல் நகரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் ஒரு சாதனையை படைத்துள்ளார்.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி தடுமாறினாலும் கேப்டன் பவுமா மற்றும் வான்டெர் டுசென் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 296 ரன்களை குவித்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் புவவேஸ்வர்குமாரும், ஷர்துல் தாக்கூரும் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக, ஷர்துல் தாக்கூர் 10 ஓவர்கள் வீசி 1 ஓவர் மெய்டனாக்கி 72 ரன்களை வாரி வழங்கினார். இவற்றில் 3 நோபால்கள் அடங்கும்.
இதையடுத்து, இலக்கை நோக்கிய இந்திய அணிக்கு ஷிகர்தவானும், விராட்கோலியும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்தும் அடுத்து வந்த ரிஷப்பண்ட், வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 214 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஜோடி சேர்ந்த பும்ரா –ஷர்துல் தாக்கூர் கூட்டணி ஆட்டத்தில் விறுவிறுப்பை கூட்டியது. இந்திய அணி தோற்றாலும் இருவரும் இணைந்து 46 பந்துகளில் 51 ரன்களை 9வது விக்கெட்டுக்கு எடுத்தனர்.
ஷர்துல் தாக்கூர் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு இதுவே முதல் ஒருநாள் போட்டி அரைசதம் ஆகும். இந்த அரைசதம் மூலம் ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான ஒருநாள் போட்டியில் 8வது வீரர் அல்லது அதற்கு கீழே இறங்கி அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 5வது வீரர் ஆவார்.
இதற்கு முன்பு லேன்ஸ் குளூஸ்னர் 75 ரன்கள், மெக்லேரன் 71 ரன்கள், ஹால் 56 ரன்கள் அடித்திருந்தனர். இந்திய வீரர் சாபா கரீம் 55 ரன்களுடன் உள்ளார். பந்துவீச்சாளராக ரன்களை வாரி வழங்கினாலும், பேட்ஸ்மேனாக அசத்தலான அரைசதம் அடித்த ஷர்துல் தாக்கூரால் இந்திய அணியின் தோல்வி ரன் வித்தியாசம் குறைந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்