தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை சமன் செய்து ஒருநாள் தொடரை சிறப்பாக தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியது.


200 பந்துகள் மீதம்:


இந்த போட்டியில் இந்திய அணி 200 பந்துகள் மீதமிருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியால், போட்டியை வெல்ல முடியாமல் போனது. 


தென்னாப்பிரிக்காவை 27.3 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்த இந்திய அணி, 16.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 100 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் வெற்றியுடன் பல சிறப்பு சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. அந்த சாதனைகளை பற்றி இங்கே பார்ப்போம்.  


நேற்று நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 5 பெரிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. 


கேப்டனாக கே.எல்.ராகுலின் சாதனைகள்:


இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிக்கு கே.எல். ராகுல் கேப்டனாக உள்ளார். இவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து ஒருநாள் போட்டியில் 7வது வெற்றியை பெற்றது. இது தவிர இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இளஞ்சிவப்பு ஜெர்சியில் களமிறங்கியது, இதன் மூலம் பிங்க் நிற ஒருநாள் போட்டியில் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை கே.எல் ராகுல் பெற்றுள்ளார்.


இந்திய அணியின் நான்காவது பெரிய வெற்றி:


இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி நான்காவது பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது (எஞ்சியிருக்கும் பந்துகளின் அடிப்படையில்). ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தென்னாப்பிரிக்காவை 200 பந்துகள் மீதமிருக்க இந்திய அணி தோற்கடித்துள்ளது. இது மீதமுள்ள பந்துகளின் அடிப்படையில் நான்காவது பெரிய வெற்றியாகும். இந்தாண்டு கொழும்பில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 263 பந்துகள் மீதமிருந்த நிலையில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


தென்னாப்பிரிக்கா அணியின் இரண்டாவது பெரிய தோல்வி:


இந்தியாவுக்கு எதிரான தோல்வி, மீதமுள்ள பந்துகளின் அடிப்படையில் தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய தோல்வியாகும். 2008 ஆம் ஆண்டு நாட்டிங்ஹாமில் நடந்த ஒரு நாள் போட்டி வரலாற்றில் அதிக பந்துகளில் தென்னாப்பிரிக்காவை இங்கிலாந்து அணி தோற்கடித்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 215 பந்துகள் மீதமிருந்த நிலையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அதன்பிறகு தற்போது எய்டன் மார்க்ரம் அணியையும் 200 பந்துகள் மீதமிருக்க இந்தியா வீழ்த்தியுள்ளது.


அறிமுக போட்டியிலேயே சாய் சுதர்ஷன் அரைசதம்:


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்ஷனுக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி சாய் சுதர்சன் 55 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.மேலும் ஒரு அறிமுக ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்த 17வது இந்திய வீரர் ஆனார்.


சாய் சுதர்ஷன் ஒருநாள் அரங்கில் அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்த நான்காவது தொடக்க வீரர் ஆவார்.
இந்திய அணியில் நான்கு பேட்ஸ்மேன்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுகமான ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்துள்ளனர்.



  • ராபின் உத்தப்பா - இங்கிலாந்துக்கு எதிராக 86 ரன்கள், 2006

  • கேஎல் ராகுல் - ஜிம்பாப்வேக்கு எதிராக 100* ரன்கள், 2016

  • ஃபைஸ் ஃபசல் - ஜிம்பாப்வேக்கு எதிராக 55*, 2016

  • சாய் சுதர்ஷன் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 55*, 2023