இறுதிப் போட்டிக்கு முன், விராட் கோலி 2024 டி20 உலகக் கோப்பையின் ஏழு இன்னிங்ஸ்களில் களமிறங்கி வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்காக விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து தன்னை விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்தார். இந்தநிலையில், விராட் கோலி இந்த போட்டியில் படைத்த சாதனைகளை இங்கே பார்க்கலாம். 






டி20 உலகக் கோப்பை நாக் அவுட்டில் அதிக ரன்கள் (இன்னிங்ஸ்):



  1. 373 - விராட் கோலி (6)

  2. 227 - ரோஹித் சர்மா (7)

  3. 226 - ஜோஸ் பட்லர் (6)

  4. 215 - மார்லன் சாமுவேல்ஸ் (5)


டி20 உலகக் கோப்பை நாக் அவுட்டில் இந்திய அணிக்காக அதிக அரைசதங்கள்:







  1. 5-விராட் கோலி*

  2. 1 - கவுதம் கம்பீர்

  3. 1 - ஹர்திக் பாண்டியா

  4. 1- ரோஹித் சர்மா

  5. 1- யுவராஜ் சிங்


ஆனால் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிக மெதுவாக அரைசதம் அடித்த வீரர் என்ற பட்டியலிலும் கோலியின் பெயர் இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் விராட் கோலிக்கு முன்பாக, சூர்யகுமார் யாதவும் முதலிடத்தில் உள்ளார்.


டி20 உலகக் கோப்பையில் மெதுவான அரை சதம்:


டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிக மெதுவாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனை பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் பெயரில் உள்ளது. இந்த உலகக் கோப்பையில் கனடாவுக்கு எதிராக ரிஸ்வான் 52 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்திருந்தார். இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டேவிட் மில்லரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதே உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் மில்லர் 50 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர் டெவோன் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் டேவிட் ஹஸ்ஸி மற்றும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் 49 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர். இத்தனைக்கும் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 48 பந்துகளில் 50 ரன்களை முடித்த விராட் கோலி வருகிறார்.



  1. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 52 பந்துகள்

  2. டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா) - 50 பந்துகள்

  3. டெவோன் ஸ்மித் (வெஸ்ட் இண்டீஸ்) - 49 பந்துகள்

  4. டேவிட் ஹஸ்ஸி (ஆஸ்திரேலியா) - 49 பந்துகள்

  5. சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 49 பந்துகள்

  6. விராட் கோலி (இந்தியா) - 48 பந்துகள்


இந்திய வீரர் பெயரில் அதிவேக அரைசதம் சாதனை:


டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த சாதனை இந்திய வீரர் ஒருவரின் பெயரில் உள்ளது. 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் 6 சிக்சர்களை அடித்திருந்தார், அதே போட்டியில் அவர் 12 பந்துகளில் அரைசதம் கடந்தார். அப்போதிருந்து, டி20 உலகக் கோப்பையில் அதிவேக அரைசதம் அடித்த சாதனை யுவராஜ் பெயரில் உள்ளது. 2014 உலகக் கோப்பையில் 17 பந்துகளில் அரைசதம் அடித்த நெதர்லாந்தின் எஸ்.ஜே.மைபர்க் இந்த சாதனையை முறியடிக்க பக்கத்தில் நெருங்கினார்.