தென்னாப்பிரிக்காவில் இன்றுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத வேதனையில், இந்த தொடரை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று இந்திய அணி களமிறங்கியுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணி மோசமான நிலையில் உள்ளது. செஞ்சூரியனில் செஞ்சூரியனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் 11 ரன்கள் முன்னிலை பெற்று இன்னும் 5 விக்கெட்டுகளை கையில் வைத்துள்ளது. 


என்ன நடந்தது இரண்டாம் நாளில்..? 


நேற்றைய இரண்டாம் நாள் தொடக்கத்தில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்குள் சுருண்டது.  இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழப்பிற்கு  256 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர், தனது கேரியரின் கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இன்னும் 140 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இன்றைய மூன்றாவது நாளிலும் தென்னாப்பிரிக்கா தொடர்ந்து ரன்களை குவித்தால், இந்த டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெற்றிபெறுவது கடினம். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால், அடுத்த டெஸ்டில் இந்திய அணி எப்படி விளையாடும் என்று தெரியாது. 


கே.எல்.ராகுலின் சதம்:


போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் குறுக்கிட, இந்திய அணி 59 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. இங்கு கே. எல்.ராகுல் 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாம் நாள் தொடக்கத்திலும் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி அற்புதமாக சதம் அடித்தார். அடுத்தடுத்து ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவருடன் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸும் முடிவுக்கு வந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்தியா 8.4 ஓவர்கள் மட்டுமே விளையாடி 245 ரன்களுக்குள் மீதம் இருந்த 2 விக்கெட்டை இழந்தது. 


எல்கர் மற்றும் டோனியின் 93 ரன் பார்ட்னர்ஷிப்:


தென்னாப்பிரிக்காவுக்கு மோசமான தொடக்கமாக அமைந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 11ஆக இருந்தபோது எய்டன் மார்க்ரம் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இங்கிருந்து டீன் எல்கர் மற்றும் டோனி டி ஜியோர்ஜி ஆகியோர் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து தென்னாப்பிரிக்கா அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். டோனி 28 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரித் பும்ராவிடம் விக்கெட்டை விட்டுகொடுக்க, அணியின் எண்ணிக்கை 113 ரன்களாக இருந்தபோது கீகன் பீட்டர்சன் 2 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 


டேவிட்டுடன் - எல்கரும் 131 ரன்கள் பார்ட்னர்ஷிப்:


ஒரு முனையில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் டீன் எல்கர் நங்கூரமாய் நின்றார். நான்காவது விக்கெட்டுக்கு டேவிட் பெடிங்ஹாமுடன் இணைந்து 131 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக அமைத்து இந்திய அணியின் முயற்சியை சிதைத்தார். அணியின் ஸ்கோர் 244 ரன்களாக இருந்தபோது டேவிட் 56 ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் கைல் வெரீன் 4 ரன்களில் பிரசித் கிருஷ்ணாவிடம் அவுட்டானார்.  அதன்பிறகு தென்னாப்பிரிக்கா அணி நேற்றைய நாள் ஆட்டம் முடியும் வரை வேறு எந்த விக்கெட்டையும் விடவில்லை. 


140 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் எல்கர்:


இரண்டாம் நாளின் ஆட்டமும் மோசமான வெளிச்சம் காரணமாக முன்னதாகவே நிறுத்தப்பட்டது. ஆட்டம் முடிக்கும் வரை தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ள நிலையில், டீன் எல்கர் 140 ரன்களுடனும், மார்கோ யான்சின்  3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக இன்னும் பேட்டிங் செய்யவில்லை.