சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 போட்டியில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் பந்திலே சிக்ஸர்:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி திலக் வர்மா சதத்தின் உதவியுடன் 219 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக சாம்சன் டக் அவுட்டான நிலையில் அபிஷேக் சர்மா அரைசதமும், திலக் வர்மா சதமும் விளாசினார். அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் அவுட்டாகிய நிலையில், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களில் அவுட்டானார்.
ஃபினிஷராக அறியப்பட்ட ரிங்குசிங் 13 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்க ஆட்டத்தின் 18வது ஓவரின் கடைசி பந்தில் முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் ராமன்தீப்சிங். சர்வதேச கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட முதல் பந்தையே மிரட்டலாக சிக்ஸர் விளாசி தனது கிரிக்கெட் கேரியரைத் தொடங்கினார். 6 பந்துகளை எதிர்கொண்ட ராமன்தீப் சிங் 1 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
புதிய நட்சத்திரமா?
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முதல் பந்தை சிக்ஸருடன் தொடங்கியது இதற்கு முன்பு சூர்யகுமார் யாதவ் மட்டுமே. தற்போது அவருடன் அந்த சாதனையை ராமன்தீப்சிங் பகிர்ந்துள்ளார். 28 வயதான ராமன்தீப்சிங் மீது கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே மிகவும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மும்பை, பஞ்சாப் அணிக்காக ஐ.பி.எல். போட்டிகளில் ஆடிய ராமன்தீப்சிங் கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக ஆடினார்.
இதுவரை 58 டி20 போட்டிகளில் ஆடி 559 ரன்கள் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 23 போட்டிகளில் ஆடி 397 ரன்கள் எடுத்துள்ளார். 4 முதல்தர கிரிக்கெட்டில் ஆடி 167 ரன்கள் எடுத்துள்ளார். 19 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 170 ரன்கள் எடுத்துள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான ராமன்தீப்சிங் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எதிர்காலத்தில் இந்திய அணியின் நட்சத்திரமாக ராமன்தீப்சிங் திகழ்வாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.