இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று இந்தோரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி ரிலே ரோசோவின் அதிரடி சதத்தால் 20 ஓவர்களில் 227 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. 


இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸில் 15வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். அப்போது பந்துவீச்சாளர் முனையில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருந்தார். அவர் தீபக் சாஹர் பந்துவீசுவதற்கு முன்பாக எல்லை கோட்டை தாண்டி வெளியேறினார். அந்த சமயத்தில் தீபக் சாஹர் பந்துவீசாமல் அவரை ரன் அவுட் செய்வது போல் எச்சரிக்கை விடுத்தார். 






இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஐசிசி கடந்த மாதம் இந்த முறையில் ஆட்டமிழக்க செய்வதற்கு எந்தவித எச்சரிக்கையும் தேவையில்லை என்று விதிகளில் மாற்றம் செய்தது. மேலும் இந்த முறைக்கு இருந்த மன்கட் என்ற பெயரை மாற்றி அதை ரன் அவுட் முறையில் எம்சிசி விதிகள் சேர்த்திருந்தது.






முன்னதாக கடந்த மாதம் இந்திய-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் போட்டியில் தீப்தி சர்மா இங்கிலாந்து வீராங்கனை டீனை இதேபோல் ரன் அவுட் செய்தார். அந்த ரன் அவுட் இங்கிலாந்து மீடியாவில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்காரணமாக அந்த ரன் அவுட் தொடர்பாக இங்கிலாந்து ஆடவர் அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவிற்கு ஆதரவாக ரவிச்சந்திரன் அஷ்வின் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடதக்கது.