தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் அது யாருக்கும் சாதகமின்றி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. 


இதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடரை கைப்பற்றுவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்ல் நகரில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்ற நிலையில், அதன் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய தொடங்கினர். 


தொடக்க வீரர்கள் ராஜத் படிதார் 22 ரன்களும், சாய் சுதர்சன் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து கேப்டன் கே.எல்.ராகுல் 21 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதற்கிடையில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா இருவரும் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை விளாசி தள்ளினர். திலக் வர்மா 52 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் பவுண்டரி, சிக்ஸர் என மாஸ் காட்டிய சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 


இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது.  தென்னாப்பிரிக்கா தரப்பில் ஹெண்ட்ரிக்ஸ் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களம் கண்டது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களை கலங்கடித்து சதம் விளாசிய டோனி ட் ஜார்ஜி  தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக அடித்து ஆடாததால் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியது.


ஜார்ஜி மட்டுமே 82 ரன்கள் விளாசிய நிலையில் அந்த அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ஒருநாள் தொடரை 2-1  என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் அர்தீப் சிங் அதிகப்பட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் தொடரின் தொடர் நாயகன் விருதை அர்தீப் சிங் பெற்ற நிலையில், 3வது போட்டிக்கான ஆட்டநாயகன் விருது சஞ்சு சாம்சன் வென்றார்.


இதனைத் தொடர்ந்து இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.