IND Vs SA Test: தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான கவுகாத்தி டெஸ்டில் 549 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் இந்திய அணி 58 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Continues below advertisement

சொந்த காசில் சூனியம்:

இந்திய மைதானங்களில் எதிரணிகளுக்கு டெஸ்ட் போட்டியில் வெற்றி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அதிலும் தொடரை கைப்பற்றுவது என்பது சாத்தியமற்றதாக விளங்கி வந்தது. ஆனால், அண்மைக்காலங்களில் அந்த நிலை தலைகீழாக மாறி வருகிறது. குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளின்போது இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஏதுவாக, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தை அமைக்கும் முடிவு என்பது, அண்மைக்காலமாக சொந்த அணிக்கு ஆபத்தாக மாறியுள்ளது. அதற்கு மற்றும் ஒரு ஆதாரமாக தென்னாப்ரிக்கா தொடர் அமைந்துள்ளது. இதில் இரண்டாவது போட்டியிலும் தோல்வியை தவிர்க்க இந்திய அணி கடுமையாக போராடி வருகிறது.

Continues below advertisement

போராடி வரும் இந்திய அணி:

உள்ளூரில் மீண்டும் ஒரு ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க, கவுகாத்தி டெஸ்டில் தென்னாப்ரிக்கா அணி நிரணியித்த 549 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது. நான்காவது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களை சேர்த்தது. இந்நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே குல்தீப், ஜுரெல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த மூன்று விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் சைமன் தான் கைப்பற்றியுள்ளார். இதனால், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தை அமைத்தால் போதாது, ஆடவும் தெரிய வேண்டுமென ரசிகர்கள் காட்டமாக தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டும் இதே பாணியில் ஆடுகளத்தை அமைத்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 3-0 என இந்தியா இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் நிலவும் பிரச்னைகள்:

பலவீனமான பேட்டிங்: தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் லைன்-அப் ஆனது வலுவான டி20 அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளது. ஆனால், சவால் அளிக்கக் கூடிய டெஸ்ட் ஆடுகளங்களில் திறனை வெளிப்படுத்த தேவையான அனுபவம் வாய்ந்தவர்கள் யாரும் இல்லை. இது ரேங்க் டர்னர் போன்ற இந்திய ஆடுகளங்களில் நெருக்கடி அளிக்கக் கூடிய எதிரணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஏதுவான தரமான பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இல்லாததை உணர்த்துகிறது. 

ஆடுகள ஏற்பாடு: முதல் நாள் முதலே பந்து திரும்பும் வகையில் தொடர்ச்சியாக ஆடுகளங்களை தயார்படுத்துவதன் மூலம், இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கும், வருகை தரும் வெளிநாட்டு வீரர்களுக்கும் இடையேயான இடைவெளியை இந்திய அணி நிர்வாகம் கருதுவதாக கூறப்படுகிறது. ஆட்டத்தின் போக்கில் பந்து சுழல்வதற்கான வாய்ப்பை அளித்தால், இந்திய வீரர்களால் ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால், ஒட்டுமொத்த மைதானங்களும் ஆரம்பத்தில் இருந்தே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பது, வெளிநாட்டு வீரர்கள் அதற்கேற்ப தயாராக கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது.

டெக்னிகலி வீக்: தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் உள்ள வீரர்கள் தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்வுகளை கட்டுப்படுத்தி விளையாடுவதிலும் பலவீனமாக இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் சாடுகின்றனர். இக்கட்டான சூழலில் சுழற்பந்து வீச்சு தாக்குதலை திறம்பட கையாண்டு அணியை மீட்கும் அளவிலான வீரர்கள் அணியில் இல்லை என அறிவுறுத்துகின்றனர். சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியர்களை காட்டிலும் சிறப்பாக பேட்டிங் செய்யும் அளவிற்கு முன்னேற்பாடுகளுடன் வரும் நிலையில், நமது வீரர்கள் சுய திறனை மேம்படுத்த வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

திறமைக்கு வாய்ப்புகள் இல்லையா? டெஸ்ட் போட்டிக்கான வழக்கான ஆடுகளங்கள் இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங் யூனிட்களில் சமபலத்துடன் மோதி போட்டியை சுவாரஸ்யமாக்க  உதவுகின்றன. அதேநேரம், உள்ளூர் ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்த  இந்திய வீரர்கள், சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொண்டு தனித்திறன் மூலம் எதிரணி மீது ஆதிக்கம் செலுத்துவர். அந்த வாய்ப்புகள் தற்போது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, உள்ளூர் சூழலை மட்டுமே நம்பி களமிறங்குவதும் ஆபத்தாக மாறியுள்ளது.

அனுப வீரர்கள் எங்கே? விராட் கோலி, ரகானே, புஜாரா மற்றும் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் வலுக்கட்டாயமாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதன் பலனையே இந்திய அணி தற்போது அனுபவித்து வருவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இக்காட்டான சூழலில் நிதானமாக ஆடி ஒரு வலுவான பார்ட்னர்ஷிப்பை கூட ஏற்படுத்த தற்போதைய வீரர்களுக்கு தெரியவில்லை எனவும் சாடுகின்றனர்.

பயிற்சியாளரின் தாக்கம்: இந்திய அணியின் செயல்பாட்டினை தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. போதிய அனுபம் இல்லாத, சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாத வீரர்களை கொண்டிருந்தபோதும், தொடர்ச்சியாக எதற்காக ரேங்க் டர்னர் ஆடுகளங்களை அமைக்க வேண்டும்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.