IND Vs SA 2nd Test: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற தென்னாப்ரிக்காவிற்கு 8 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
தோல்வியின் விளிம்பில் இந்தியா...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் எதிரணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்ரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 201 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 260 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்த தென்னாப்ரிக்கா, 549 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி நான்காவது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களை சேர்த்துள்ளது.
ஒயிட்வாஷை தவிர்க்குமா இந்தியா?
கடைசி நாளான இன்று 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், இந்தியா வெற்றி பெற 522 ரன்கள் தேவை. இலக்கை அடைய தவறினால் உள்ளூர் டெஸ்ட் போட்டியில் ஒயிட்வாஷ் எனும் மோசமான தோல்வியை அடைய வேண்டி இருக்கும். ஏற்கனவே 1-0 என தென்னாப்ரிக்கா அணி முன்னிலையில் உள்ளதால், குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெற வேண்டும். ட்ரா செய்தாலும் தொடரை தென்னாப்ரிக்கா அணி கைப்பற்றி விடும். ஏற்கனவே கடந்த ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்ளூரில் தொடரை இழந்த இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கம்பேக் கொடுத்தது. ஆனால், வலுவான அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வெற்றிகளை குவிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறுவது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்ச சேஸிங்:
டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக வெற்றிகரமாக துரத்தப்பட்ட இலக்கு என்பது 418 ரன்களாகும். 2003ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்த சாதனையை படைத்தது. ராம்நரேஷ் சர்வான் மற்றும் சிவ்நரைன் சந்தர்பாலின் அட்டகாசமான சதங்கள் மற்றும் ஜாம்பவானும் அணியின் கேப்டனுமான லாராவின் 60 ரன்கள் பங்களிப்பு மூலம், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்த்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அதுவும் 128.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக 400 மற்றும் அதற்கு மேற்பட்ட இலக்கு என்பது டெஸ்ட் போட்டியில் 4 முறை மட்டுமே வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஒன்று கூட 2010ம் ஆண்டிற்கு பிறகு நிகழ்ந்தது இல்லை.
- மேற்கிந்திய தீவுகள் — 418/7, 2003, செயிண்ட் ஜான்ஸ், vs ஆஸ்திரேலியா
- தென்னாப்பிரிக்கா — 414/4, 2008, WACA, vs ஆஸ்திரேலியா
- இந்தியா — 406/4, 1976, போர்ட் ஆஃப் ஸ்பெயின், vs வெஸ்ட் இண்டீஸ்
- ஆஸ்திரேலியா — 404/3, 1948, லீட்ஸ், vs இங்கிலாந்து
549 ரன்களை அடைவது சாத்தியமா?
அதேநேரம், டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச சேஸிங் என்பது, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 406 ரன்கள் என்ற இலக்கை எட்டியதாகும். 1976ம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வில் இந்திய அணிக்காக சுனில் கவாஸ்கர் மற்றும் குண்டப்பா விஸ்வநாத் ஆகியோர் சதம் விளாசினார். மொஹிந்தர் அமர்நாத் 85 ரன்களையும், ப்ரிஜேஷ் படேல் 49 ரன்களும் சேர்த்து பங்களிப்பு தந்துள்ளனர். சுவாரஸ்யமாக ஆசிய மைதானங்களில் இதுவரை ஒருமுறை கூட 400 ரன்கள் என்ற இலக்கு சேஸ் செய்யப்பட்டதே இல்லை. 2021ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக சட்டோக்ராமில் மேற்கிந்திய தீவுகள் அணி 395 ரன்கள் என்ற இலக்கை எட்டியதே அதிகபட்சமாகும். இதனால் 549 ரன்கள் என்ற இமால இலக்கை எட்டுவது என்பது சாத்தியமா? என்பது கேள்விக்குறியாகவே தொடர்கிறது.
ஆசியாவில் அதிகபட்ச டெஸ்ட் சேஸிங்
- மேற்கிந்திய தீவுகள் — 395/7, 2021, சட்டோக்ராம், vs வங்கதேசம்
- இலங்கை — 391/6, 2017, கொழும்பு (RPS), vs ஜிம்பாபே
- இந்தியா — 387/4, 2008, சென்னை, vs இங்கிலாந்து
- பாகிஸ்தான் — 382/3, 2015, பல்லேகெலே, Vs இலங்கை
- இலங்கை — 352/9, 2006, கொழும்பு (PSS), vs தென்னாப்பிரிக்கா