தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. 


ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள வாண்டரரஸ் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 229 ரன்களுடன் ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 266 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்காரணமாக தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 240 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 


இந்த இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று மழை காரணமாக தாமதமானது. வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வந்தது. இதனால் மழை நின்ற பிறகே ஆட்டம் தொடர்ந்தது. 






போட்டி தொடங்கியபோது களத்தில் இருந்த கேப்டன் டீன் எல்கர், வான் டெர் டுசன் ஆகியோர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் நின்றனர். இந்திய அணி பந்துவீச்சாளர்களைப் பொருத்தவரை விக்கெட் எடுக்க திணறினர். 40 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது ஷமி பந்துவீச்சில் வான் டர் டுசன் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து, பவுமா களமிறங்கினார். அரை சதம் கடந்த கேப்டன் டீன் எல்கர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 96* ரன்கள் எடுத்தார். பவுமா தன் பங்கிற்கு 23* ரன்கள் அடிக்கவே, தென்னாப்ரிக்க அணி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றுள்ளது.  


முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அந்தப் போட்டியை இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் அதேபோல் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், மழை நடுவே குறுக்கிட்டு போட்டி தாமதமாக தொடங்கியது. கேப்டனின் சிறப்பான ஆட்டத்தால், தென்னாப்ரிக்கா வெற்றியை ஈட்டி இருக்கிறது.


இதனால், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இப்போது சமனாகி உள்ளது. அடுத்து கேப் டவுனில் நடக்க இருக்க டெஸ்ட் போட்டிதான் தொடரை வெல்லப்போகும் அணியை தீர்மாணிக்க உள்ளது. இந்த போட்டி ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது.