இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. டி20, ஒருநாள் தொடர் முடிந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது. புத்தாண்டின் தொடக்கத்தில் இந்திய அணி ஆடும் முதல் கிரிக்கெட் போட்டி இது என்பதால், ரசிகர்கள் இந்திய அணி வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.


இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியாவின் முகமது சிராஜின் மிரட்டலான பவுலிங்கால் 55 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி சரிந்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித்சர்மா, சுப்மன்கில், விராட் கோலி தவிர மற்ற வீரர்கள் சொதப்ப இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


மார்க்ரம் மிரட்டல் சதம்:


இதையடுத்து, நேற்று தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. முதல் நாளான நேற்றே தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. களத்தில் மார்க்ரம் – பெடிங்கம் நின்றனர். இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலே பெடிங்கம் 11 ரன்களுக்கு அவுட்டானார்.


அடுத்து வந்த விக்கெட் கீப்பர் கைல் வார்ரென் 9 ரன்களுக்கு அவுட்டாக, முதல் டெஸ்ட்டில் அசத்திய ஜான்சென் 11 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த கேசவ் மகாராஜ் 3 ரன்களுக்கு அவுட்டானார். 111 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி தடுமாறியது. விக்கெட்டுகள் சரமாரியாக விழுந்தாலும் மார்க்ரம் மறுமுனையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோரை ஏற்றினார். அபாரமாக ஆடிய மார்க்ரம் சதம் விளாசினார்.


79 ரன்கள் இலக்கு:


மார்க்ரம் தனி ஆளாக அசத்திய நிலையில் அவரை முகமது சிராஜ் அவுட்டாக்கினார். அவர் 103 பந்துகளில் 17 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 106 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது, தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் 162 ரன்களாக இருந்தது. மார்க்ரம் 8வது விக்கெட்டாக வெளியேறிய சில நிமிடங்களில் ரபாடாவும், நிகிடியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், தென்னாப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது.


இந்திய அணியை காட்டிலும் 78 ரன்கள் தென்னாப்பிரிக்க அணி முந்தியுள்ளதால் இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த டெஸ்டில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததற்கு பழிதீர்க்கும் விதமாக இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று புத்தாண்டை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


இந்திய அணி சார்பில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் பும்ரா அபாரமாக வீசினார். அவர் 13.5 ஓவர்கள் பந்துவீசி 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகேஷ்குமார் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கடந்த இன்னிங்சில் சொதப்பிய ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்சில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.