இந்தியா - தென்னாப்பிரிக்கா:


செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன்  நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.


இதில், முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களில் சுருண்டது. அந்த வகையில் இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சிறப்பான முறையில் பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.


பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி153 ரன்களில் தென்னாப்பிரிக்க பந்து வீச்சில் சுருண்டது. இதில், 11 பந்துகளில் 6 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. முன்னதாக, இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா 39 ரன்களும், சுப்மன் கில் 36 ரன்களும் , விராட் கோலி 46 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது.


இரண்டவது இன்னிங்ஸ்:


இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 176 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணியின் பந்து வீச்சில் சுருண்டது. அதன்படி, அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதேநேரம் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஐடம் மார்க்ரம் மட்டுமே சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அந்த வகையில், 103 பந்துகள் களத்தில் நின்ற அவர் 17 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 106 ரன்களை குவித்தார்.


இந்திய அணி வெற்றி:


பின்னர், இலக்கை நோக்கி களம் இறங்கியது இந்திய அணி. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினார்கள்.


இதில் 23 பந்துகள் களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் 28 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் நிதானமாக விளையாடினார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மர். இதனிடையே, களமிறங்கிய சுப்மன் கில் 10 ரன்களிலும் , விராட் கோலி 12 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுக்க, ரோகித் சர்மா இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இவ்வாறாக இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை எடுத்தது வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.


 


மேலும் படிக்க:IND vs SA 2nd Test: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்... 153 ரன்களில் சுருண்ட இந்திய அணி!