IND Vs SA 2nd ODI: இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர், 1-1 என சமநிலையை எட்டியுள்ளது.


இந்தியா - தென்னாப்ரிக்கா தொடர்:


தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று விதமான கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டி-20 தொடரை 1-1 என சமன் செய்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் தான், இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.


பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா: 


செயின் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான கெய்க்வாட் 4 ரன்களில் பெவிலியன் திரும்ப, அவரை தொடர்ந்து வந்த திலக் வர்மாவும் 10 ரன்களில் நடையை கட்டினார். இதனால் 46 ரன்களை சேர்ப்பதற்குள் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.


சாய் சுதர்ஷன் - ராகுல் கூட்டணி:


இதையடுத்து தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்ஷனுடன் 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவருமே அவ்வப்போது பவுண்டரிகளை விளாச, அணி சரிவில் இருந்து மீண்டது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த சாய் சுதர்ஷன், 62 ரன்களில் நடையை கட்டினர். கேப்டன் ராகுல் 56 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


இந்திய அணி ஆல்-அவுட்:


இவர்களை தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணி 46.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்ரிக்கா அணி சார்பில் பர்கர் 3 விக்கெட்டுகளையும், ஹென்றிக்ஸ் மற்றும் மஹாராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


தென்னாப்ரிக்கா அணி அசத்தல் பேட்டிங்:


இதையடுத்து களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அபாரமான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். ஹென்றிக்ஸ் மற்றும் டோனி ட் ஜார்ஜி ஆகிய இருவருமே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினர். 52 ரன்களை சேர்த்து ஹென்றிக்ஸ் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் ஜார்ஜி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் திணறினர்.


தென்னாப்ரிக்கா வெற்றி:


வான் டெர் டஸன் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ஜார்ஜி இந்திய அணியின் பந்துவிச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 122 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்களை விளாசி, 119 ரன்களை சேர்த்து அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், தென்னாப்ரிக்கா அணி 42.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-1 என சமன் செய்துள்ளது. இதையடுத்து, தொடரின் கடைசி போட்டி நாளை நடைபெற உள்ளது.