இன்று டிசம்பர் 19ம் தேதி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான நாள். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)2024 சீசனுக்கான மினி ஏலம் முதல் நாள் மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. 


இதன்பின்னர் இந்திய அணிக்கும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் இந்த இரண்டாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 


தொடரை வெல்லுமா இந்திய அணி..?


இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை 2-0 என கைப்பற்றும். இந்த ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். இதன்மூலம், இந்திய அணி தென்னாப்பிரிக்காவின் சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக தொடரை வென்று சாதனை படைக்கும். 


இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் மொத்தம் 8 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி ஒருமுறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியும் 2018ல் பதிவானது. தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் 9வது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் கே.எல்.ராகுலுக்கு இந்த தொடரை வென்று வரலாறு படைக்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. 


இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் சாதனை:


மொத்த ஒருநாள் தொடர்: 8
இந்தியா வென்றது:1 
தென்னாப்பிரிக்கா வென்றது: 7 


போட்டி நடைபெறும் கெபர்ஹா ஸ்டேடியம் எப்படி..? 


கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 5ல் தோல்வியை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4 ஆட்டங்களில் தோல்வியடைந்து 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது தவிர, கென்யாவுக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடி இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.


செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இதுவரை 42 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 21 போட்டிகளில் பின்னர் பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 233 ரன்கள். அதே நேரத்தில், சமீபத்தில் விளையாடிய டி20 தொடரின் போது இந்திய அணியும் இந்த மைதானத்தில் ஒரு போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. 


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் அணி:


இந்தியா:


கே.எல். ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்ஷன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர் , குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப்.


தென்னாப்பிரிக்கா:


எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், நாண்ட்ரே பெர்கர், டோனி டி ஜோர்ஜி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), கேசவ் மஹராஜ், மிஹாலி மபோங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்னி, லிசாட் வில்லியம்ஸ்.


நேரலைப் போட்டியை எங்கே பார்ப்பது?


இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் மற்ற போட்டிகளைப் போலவே, இந்தப் போட்டியும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் வெவ்வேறு சேனல்களில் ஒளிபரப்பப்படும். இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு Disney + Hotstarல் பார்க்கலாம்.