இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்காவை பேட்டிங் செய்ய அழைத்தது. ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு இளம் வீரர் ஜெய்ஸ்வால்  2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்து அவுட்டாக, ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி சேர்ந்தனர். 

Continues below advertisement


கோலி அதிரடி:


ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்த ஜோடி அபாரமாக ஆடிய நிலையில் இவர்கள் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ரோகித் சர்மாவிற்கு 1 ரன்னில் தென்னாப்பிரிக்க வீரர் டோனி கேட்சைத் தவறவிட்ட பிறகு இருவரும் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, விராட் கோலி வழக்கத்தை காட்டிலும் அதிரடியாக ஆடினார். 




பவுண்டரியும், சிக்ஸரும் என விளாசினார். ஜான்சென், பர்கர், கார்பின் பாஸ்ச், பார்ட்மன், சுப்ராயன் என யார் வீசினாலும் கோலி பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். ரோகித் சர்மாவும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க ரன்னும் ஜெட் வேகத்தில் ஏறியது. கோலி அரைசதம் விளாசிய நிலையில், சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய ரோகித் சர்மா 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட்டாக, கெய்க்வாட் 8 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னிலும் அவுட்டாக விராட் கோலி சற்று நிதானம் காட்டினார். 


52வது சதம்:


கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி தன்னுடைய 52வது சதத்தை விளாசினார். சதம் விளாசிய விராட் கோலி அதன்பிறகு அதிரடியாக ஆடினார். பவுண்டரியும், சிக்ஸரும் விளாசிய விராட் கோலி முதுகுவலியால் அவதிப்பட்டார். பின்னர், 43வது ஓவரில் அவுட்டானார். அவர் 120 பந்துகளில் 11 பவுண்டரி 7 சிக்ஸருடன் 135 ரன்கள் எடுத்து அவுட்டானார். 


விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில், ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆடி வருகின்றனர். ரோகித் சர்மாவிடம் இருந்து ஒருநாள் கேப்டன்சி பறிக்கப்பட்ட நிலையில், ரோகித் மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற கம்பீர் மற்றும் அகர்கர் தரப்பில் இருந்து அழுத்தம் தரப்படுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.


நெருக்கடிக்கு பதிலடியா?


மேலும், தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு இவர்கள் இருவரும் அணியில் நீடிப்பது கேள்விக்குறி? என்ற தகவலும் பரவி வருகிறது. இந்த சூழலில், ஆஸ்திரேலிய தொடரின் கடைசி போட்டியில் சதம் விளாசி ரோகித் சர்மா அசத்திய நிலையில், இன்று விராட் கோலி அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார். 




விராட் கோலி 2027 உலகக்கோப்பை வரை விளையாட ஆர்வம் காட்டி வரும் நிலையில், அணி நிர்வாகத்தில் அவருக்கும், ரோகித் சர்மாவிற்கும் நெருக்கடி தரப்படுவதாக தொடர்ந்து தகவல் உலா வருகிறது. அந்த நெருக்கடிக்கு பதிலடி தரும் விதமாக விராட் கோலி சதத்தை விளாசி தனது பாணியில் சதத்தை கொண்டாடி அசத்தியுள்ளார். கோலி - ரோகித்திற்கு எதிரான அணி நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கான சவுக்கடியாகவும் இது அமைந்துள்ளது.