தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டனாக கே.எல்.ராகுல் இன்று தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் பவுமா, வான் டர் டுசனின் சதங்களால் இந்திய அணி வெற்றி பெற 297 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது தென்னாப்ரிக்க அணி. 


ஓப்பனர்கள் குவிண்டன் டி காக், மாலன் ஆகியோர் ஏமாற்றம் தர, பவுமா ஒன் டவுனாக களமிறங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த மார்க்கரம் ரன் அவுட்டாக வான் டர் டுசன் களமிறங்கினார். தொடக்கத்திலேயே, பும்ரா, அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுக்க, ஒரு ரன் அவுட்டும் ஆக, தென்னாப்ரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய பவுமா - வான் டர் டுசன் ஜோடி மெதுவாக ரன் சேர்க்க தொடங்கியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல், ரன் மழையை வாரி வழங்கினர் இந்திய பந்துவீச்சாளர்கள்.


பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல், அஷ்வின், சாஹால் ஆகிய ஐவரும் மாறி மாறி தலா 10 ஓவர்களை வீசினர். விக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். நிதானமாக ஆடிய பவுமா, வான் டர் டுசன் என இருவரும் சதம் கடந்து அனியின் ஸ்கோரை உயர்த்தினர். 110 ரன்கள் எடுத்திருந்தபோது, பும்ரா பந்துவீச்சில் பவுமா ஆட்டமிழந்தார். பவுமா - வான் டர் டுசன் ஜோடி 204 ரன்கள் குவித்தனர். இதனால், 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது தென்னாப்ரிக்க அணி. 






இந்தத் தொடரை பொறுத்தவரை டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. ஆகவே ஒருநாள் தொடரை வென்று ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அனுபவ வீரர் ரோகித் சர்மா அணியில் இல்லாத போதும் தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவான் மீண்டும் அணிக்கு வந்துள்ளார். இதனால் தொடக்கத்தில் இந்திய அணிக்கு ஒரு கூடுதல் பலமாகவே பார்க்கப்பட்டுகிறது. கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் இவர் 1 சதம் மற்றும் 2 அரைசதம் விளாசி 326 ரன்கள் எடுத்தார். எனவே இந்தமுறையும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், 297 ரன்களை சேஸ் செய்து களமிறங்கும் இந்திய அணி, போட்டியை வெல்லும் முனைப்பில் விளையாடும் என்பது உறுதி. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண