தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முன்று வகைக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இன்று அதாவது டிசம்பர் 17ஆம் தேதி இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி இந்திய அணி பந்து வீசத் தொடங்கியது.
இளம் இந்திய பந்து வீச்சாளர்கள் பலமான தென்னாப்பிரிக்கா அணியை என்ன செய்யவுள்ளனர் என்ற ஆவல் இந்திய ரசிகர்களுக்கு இருந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பிலோ இந்திய அணிக்கு சவாலான இலக்கினை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கினர். ஆனால் போட்டியின் இரண்டாவது ஓவரினை வீசிய அர்ஷ்தீப் சிங் அந்த ஓவரின் 4வது பந்துல் ஹென்றிக்ஸையும் 5வது பந்தில் வெண்டர் டசன் ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றினார். அப்போது தென்னாப்பிரிக்கா அணி 3 ரன்கள் சேர்த்திருந்தது.
அதன் பின்னர் இணைந்த மார்க்ரம் மற்றும் டோனி தென்னாப்பிரிக்கா அணியை மேற்கொண்டு விக்கெட் விடாமல் கொண்டு செல்வதில் கவனமாக இருந்தனர். ஆனால் இவர்களின் ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அணியின் ஸ்கோர் 42 ரன்களாக இருந்தபோது இவர்களின் பார்ட்னர்ஷிப்பினை அர்ஷ்தீப் சிங் பிரித்தார். அதன் பின்னர் அணியின் ஸ்கோர் 52 ரன்களாக இருந்தபோது இருந்தபோது ஹென்றிச் கிளாசன், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் மற்றும் முல்டர் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். 52 ரன்களில் இந்திய அணி ஹாட்ரிக் விக்கெட்டினை கைப்பற்றியது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 52 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இதனைப் பார்த்தபோது தென்னாப்பிரிக்கா அணி 100 ரன்களை எட்டுமா என்ற கேள்வி எழுந்தது.
இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும் அவேஷ்கான் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.