IND vs SA: தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
நாளை முதல் ஒருநாள்:
இந்த சூழலில், இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடக்கிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகி தோல்வி அடைந்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்த ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது.
கேப்டன் சுப்மன்கில் காயம் அடைந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துகிறார். இந்திய அணிக்கு பக்கபலமாக முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
நம்பிக்கையுடன் களமிறங்கும் தென்னாப்பிரிக்கா:
டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தியதால் பெரும் நம்பிக்கையுடன் ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது. அதேபோல, இந்திய அணியை தோற்கடித்த பிறகு தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் ஆணவத்துடன் அளித்த பேட்டிக்கு பதிலடி தரும் விதமாக இந்திய அணி தயாராகி வருகிறது.
பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் இந்திய அணியில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் உள்ளனர். திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ரெட்டி அணியில் இருந்தாலும் ப்ளேயிங் லெவனில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமே ஆகும்.
பேட்டிங் பலம்:
அதேபோல, தென்னாப்பிரிக்க அணியிலும் கேப்டன் பவுமா, ப்ரீட்ஸ்கே, ப்ரெவிஸ், டி காக், மார்க்ரம், ரிக்கெல்டன், டோனி என வலுவான பேட்டிங் உள்ளது. ஆல்ரவுண்டர்களாக ஜான்சென், கார்பின் போஸ்ச் உள்ளனர். பந்துவீச்சில் நிகிடி, கேசவ் மகாராஜ், பர்கர், ஜான்சென் உள்ளனர்.
இந்திய அணியைப் பொறுத்தவரை பிரதான ஆல்ரவுண்டராக ஜடேஜா களமிறங்குகிறார். அடுத்த ஆல்ரவுண்டராக நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவர் களமிறங்குவார்கள். இந்திய அணியில் பும்ரா, சிராஜ் இல்லாதது சற்று பலவீனமே ஆகும். ஆனாலும், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா உள்ளனர். இவர்களுடன் ஹர்ஷித் ராணா உள்ளார். குல்தீப்யாதவ் சுழலில் அசத்துவார் என்று நம்பப்படுகிறது.
பலமும், பலவீனமும்:
இந்திய அணிக்கு சொந்த மண்ணில் ஆடுகிறோம் என்பது பலம் ஆகும்.அதேசமயம், இந்திய அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாகவே உள்ளது. தென்னாப்பிரிக்காவின் வலுவான பேட்டிங் ஆர்டரை இந்திய பந்துவீச்சு சிதைத்தால் மட்டுமே வெற்றி வசப்படும்.
மேலும், ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியில் சொதப்பிய ரோகித் அடுத்த 2 போட்டியிலும் அசத்திய நிலையிலும், முதல் 2 போட்டியில் சொதப்பிய விராட் கோலி கடைசி போட்டியில் கலக்கிய நிலையில் அவர்களது சிறப்பான ஆட்டம் இந்த தொடரிலும் நீடிக்கும் என்று கருதப்படுகிறது.
2027 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ஆடி வரும் இந்திய அணிக்கு குறைவான ஒருநாள் போட்டிகளே இருப்பதால் இனி வரும் போட்டிகளில் முழு கவனத்துடன் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். இந்திய நேரப்படி இந்த போட்டி நாளை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. ஹாட்ஸ்டாரில் ஓடிடியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் பார்க்கலாம்.