ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 60 ரன்கள் குவித்து தொடர்ச்சியாக 2வது அரைசதத்தை பதிவு செய்தார். இதன்காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.


இந்நிலையில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது ஆட்டத்தின் 18வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது ஆடிய ஆசிஃப் அலி பந்தை தூக்கி அடித்தார். அந்தப் பந்தை அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடிக்க முற்பட்டு தவறவிட்டார். அந்தக் கேட்சை அவர் தவறவிட்டது ஆட்டத்தின் முக்கிய திருப்பமாக அமைந்தது. ஏன்னென்றால் அதற்கு அடுத்த புவனேஸ்வர் குமார் ஓவரில் ஆசிஃப் அலி 19 ரன்கள் விளாசி பாகிஸ்தான் அணியின் வெற்றியை கிட்டதட்ட உறுதி செய்தார். 






இந்தச் சூழலில் நேற்று அர்ஷ்தீப் சிங் கேட்சை தவறவிட்டது தொடர்பாக ட்விட்டரில் பலரும் அவரை வறுத்து எடுத்துள்ளனர். அதேபோல் மற்ற சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நேற்றைய போட்டியில் இந்திய பேட்டிங்கின் போது கடைசி ஓவரில் ஃபாக்கர் ஸமான் கேட்சை தவறவிட்டார். அப்போது அவருக்கு பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் ஆதரவாக தட்டி கொடுத்தனர் என்பதை மேற்கோள் காட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர். 










இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதேபோல் 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. அப்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தொடர்பாக பலரும் ட்விட்டரில் மோசமான கருத்துகளை தெரிவித்து வந்தனர். அந்தவகையில் தற்போது மீண்டும் அர்ஷ்தீப் சிங் தொடர்பாக இவ்வாறு கருத்து தெரிவித்து வருவது பெரும் கண்டனத்திற்கு உரியதாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.